பக்கம் எண் :

பயன்படுத்தும் பாங்கு 157

சென்னையிலிருந்து என் தாயாரை மதுரைக்கு வரவழைத்தேன்
என்று எழுதுவது பொருத்தமானது. தன்னிடத்தில் ஒருவரை வரச்
சொல்லுதலையே அழைத்தல் என்று எழுதுவது மரபாகும்.

சென்ற வகுப்பில் படித்தீர்கள் என்று சிலர் எழுதுகின்றனர்.
"முன் வகுப்பில்" என்று எழுத வேண்டும்.

இப்படம் எத்தனை அழகாயிருக்கிறது என்றெழுதுகின்றார்கள்.
எத்தனை என்பது எண்ணைக் குறிக்கும் எவ்வளவு அழகாய்
இருக்கிறது என்று எழுத வேண்டும்.

மாடுகள் புற்களை மேய்ந்து கொண்டிருந்தன என்பது தவறு.
மாடுகள் புல்லை மேய்ந்து கொண்டிருந்தன என்க.

பல ஆறுகளின் நீர்களைக் குடித்தேன் என்பது தவறு.

பல ஆறுகளின் நீரைக் குடித்தேன் என்க.

பலருடைய தாகங்களைத் தண்ணீர் கொடுத்து நீக்கினான்
என்பது தவறு. தாகத்தை என்க.

நாட்டு மக்களுடைய வறுமைகளை ஒழிக்க என்பது தவறு.
வறுமையை என்க.

புல், நீர், தாகம், வறுமை ஆகியவற்றிற்குப் பன்மை கிடையாது.

கால்கள் என்பதைக் காற்கள் என்று எழுதுகிறோமா? இல்லையே.
ஆகையால், நூற்கள் என்றும் தொழிற்கள் என்றும் எழுதாமல் நூல்கள்
என்றும் தொழில்கள் என்றும் எழுதுக. தோள்கள் என்பதைத் தோட்கள்
என்று சொல்வதில்லையே; தோள்கள் என்றே சொல்கிறோம். அது
போலவே நாள்கள் என்பதை நாட்கள் என்று எழுதாமல் நாள்கள்
என்றே எழுதுக. நாட்கள் என்பது புதிய கள் என்றே பொருள் தரும்.