பக்கம் எண் :

158நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

‘கொடுக்கப்பெறும், கொடுக்கப்படும்’ என்னும் சொற்களைப்
பயன்படுத்துவதில் வேறுபாடு உண்டு. ‘இவன் எம்.ஏ. பட்டம்
கொடுக்கப்பெற்றான்.’ இது மனமுவந்து பெறுதலைக் குறிக்கும்.
‘இவன் விலங்கிடப்பட்டான்’. இது வலியச் செய்தலைக் குறிப்பிடும்.

‘இயலாது’, ‘கூடாது’, ‘வேண்டும்’ என்னும் சொற்களைப்
பயன்படுத்துவதிலும் வேறுபாடு உண்டு.

"நீ இதனைச் செய்ய இயலாது" (Cannot).

"நீ இதனைச்செய்யக் கூடாது" (Should not).

"நீ இதனைச் செய்ய வேண்டும்" (Should do).

இவ்வெடுத்துக் காட்டுகளைக் கண்டு வேறுபாடு தெரிந்து கொள்க.

கைப்பற்றுதல், கைக்கொள்ளுதல் ஆகிய இச்சொற்களையும்
பொருளறிந்து பயன்படுத்த வேண்டும். கைப்பற்றுதல் என்பது
வலிந்து எடுத்துக் கொள்ளுதலைக் குறிக்கும்.

காவல் துறையினர் திருடன் திருடிய பொருளைக் கைப்பற்றினர்.

கொள்ளுதல் என்பது மேற்கொள்ளுதலைக் குறிக்கும்.

என் நண்பர் நாள்தோறும் விடியற்காலத்தில் 5 மணிக்கு
எழுந்திருக்கும் பழக்கத்தைக் கைக்கொண்டிருக்கிறார்.

பழக்கம் வழக்கம் - பலர் இச்சொற்களைத் தவறாகப்
பயன்படுத்துகின்றனர். பலகி வருவது பழக்கம். அதிகாலையில்
எழுந்திருப்பது என்பது பழக்கமாகும். வழங்கி வருவது வழக்கம்
திருமணத்தில் மொழி எழுதுவது - அஃதாவது பணம் எழுதுவது -
மிகக்கொடிய வழக்கம் என்பது அறிஞர்கள் கருத்து. பழக்கம்
தனிமனிதனை ஒட்டியது. வழக்கம் சமுதாயத்தை ஒட்டியது.