|
‘அல்ல’, ‘இல்லை’. இச் சொற்களைப் பலர் தவறாகப்
பயன்படுத்துகின்றனர். ‘இவை நான் சொன்ன நூல்கள் அல்ல’ என்றால்,
‘நான் சொன்னவை வேறு உண்டு’ என்பது பொருள். ‘நீங்கள் சொன்னது
இங்கு இல்லை’ என்றால், ‘நீங்கள் சொன்னது இங்குக் கிடையாது’
என்பதுதான் பொருள்.
ருதுபர்ணன் நளனைக் கண்டு, "நீ எத்தொழிலில் வல்லவன்?
என்று கூறினான்" என்று ஒருவாக்கியம் கண்டேன். கூறினான் என்பது
தவறு. வினவினான் என்று எழுத வேண்டும்.
எத்தனை என்பது எண்ணைக் குறிக்கும்; எவ்வளவு என்பது
அளவைக் குறிக்கும்.
எத்தனை தேங்காய் வாங்கினாய்?
எவ்வளவு மிளகு வாங்குவாய்?
எவ்வளவு நாளிதழ் விற்றாய்? என்பது தவறு;
எத்தனை நாளிதழ் விற்றாய்? என்க.
எத்தனை அழகு என்பது தவறு;
எவ்வளவு அழகு என்று எழுதுக.
ஓரு நாளிதழில் ‘இன்றைய செய்தி’ என்பதற்கு நகர நடப்பு
என்னும் தலைப்பு இருந்தது. சென்னைப் பகுதிகளில் நடப்பு என்னும்
சொல் தாலியறுக்கும் நாளைக் குறிக்கும். காரியம் என்னும் வடசொல்
சென்னைப் பகுதிகளில் நீத்தார் கடனைக் குறிக்கும்.
பந்தலுக்கும் காவணத்துக்கும் செட்டி நாட்டில் வேறுபாடு உண்டு.
பந்தல் என்னும் சொல், இலக்கியத்தில் மணப் பந்தலுக்கு வருகிறது.
ஆனால், செட்டி நாட்டார் பிணம் இருக்கும் இடத்திலும் நீத்தார்
கடன் செய்யும் இடத்திலும் போடுவதைப் பந்தல் என்றும்,
திருமணத்துக்குப் போடுவதைக் காவணம் என்றும் கூறுகின்றனர்.
|