|
செல்லுதல், கொடுத்தல், அங்கு, ஆங்கு, இவற்றைப்
படர்க்கையிடத்தில் பயன்படுத்தல் வேண்டும் என்பர் தொல்காப்பியர்.
அவனிடம் சென்றான், அவனுக்குக் கொடுத்தான் என்றும், அங்குச்
சென்றான். ஆங்குச் சென்றான் என்றும் எழுதுக.
ஆம், போலும். ஒருவர் தமக்கு உடன்பாடில்லாத அல்லது பிறர்
கூற்றாக, ஆம் என்பதையோ போலும் என்பதையோ
சேர்த்தெழுதுவதுண்டு.
இராவணனுக்குப் பத்துத் தலைகள் உண்டாம்.
இது நம்பிக்கையற்றுக் கூறுவதைக் குறிப்பிடும்.
அவர் இதைச் சொல்லிவிட்டுப் போனாராம்.
இது துணியப்படாத நிலையில் கூறுவதாகும்.
இவ்வாறு கன்னட மொழி இலக்கணம் கூறுகிறதாம்.
இது பிறர் கூற்றால் கூறுவது.
அவர் வீட்டுக்கு நாளைக்கு வருவதாகச் சொல்லிவிட்டுப்
போனார் போலும்.
தெளிவற்ற நிலையில் போலும் என்னும் சொல்
பயன்படுத்தப்படுவதையும் காணலாம்.
ஆம், ஆவது. ஆம் என்பது எண்ணோடு சேர்ந்து வரும்.
ஆவது என்பது எண்ணோடு சேர்ந்து வருவதுண்டு. ஆம்
எண்ணிக்கையையும் ஆவது வரிசை முறையையும் குறிப்பிடுவதாம்.
முதலாம் பாகம், இரண்டாம் பாகம்.
இரண்டாவது பதிப்பு, ஆறாவது பதிப்பு.
இவ்வீடு இத்தெருவில் 19-ஆம் எண்ணுள்ள வீடு.
இம்முறை மாறி வருவதுமுண்டு. ஆவது என்பது ஐயப் பொருளிலும்
வரும்.
மாங்கன்றை ஆடாவது மாடாவது மேய்ந்திருக்கும்.
|