பக்கம் எண் :

162நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

ஐயத்தைக் காட்டும் சொல்லாக ஆவது என்பதை பயன்படுத்தும்
போது இடையில் அல்லது என்னும் சொல் வருதல் கூடாது.
மாங்கன்றை ஆடாவது அல்லது மாடாவது மேய்ந்திருக்கும்
என்றெழுதுவது தவறு.

பல, சில. இப்பெயர்ச் சொற்கள் பலவின்பாற் சொற்கள்.
பலவின்பால் - அஃறிணைப் பன்மை. இவற்றைப் பலவின்பாற்
சொற்களுக்கே அடைமொழியாகப் பயன்படுத்தப்படல் வேண்டும்.
பல வீடுகள், சில செய்திகள் என்பனவற்றை எடுத்துக்காட்டுகளாகக்
கூறலாம். ஆனால், இவ்வாறு நூல்களில் காணப்படவில்லை. உலக
வழக்கிலும் பயன்படுத்தக் காணோம். கி.பி.9-ஆம் நூற்றாண்டிலேயே
பல, சில என்பவை உயர்திணைக்கும் அடைமொழியாய் வந்துவிட்டன.

திருவாசகத்தை அளித்தவரும் கி.பி.9-ஆம் நூற்றாண்டின்
இறுதியில் வாழ்ந்தவருமான அருட்கவிஞர் மாணிக்கவாசகர் தமது
திருவெம்பாவையின் 7-வது பாட்டில், "பல அமரர் உன்னற்கு அரியான்"
என்று பாடியுள்ளார். பண்டை உரையாசிரியராகிய கி.பி.14-ஆம்
நூற்றாண்டில் வாழ்ந்த உச்சி மேற்கொள்ளும் நச்சினார்க்கினியரும்
‘வெறியறி சிறப்பின்’ என்று தொடங்கும் தொல்காப்பியப் புறத்திணை
நூற்பாவில் வரும் ‘பூவை நிலையை’ விளக்குகையில், சேரனைப்
பற்றியுள்ள வெண்பாவைக் காட்டி, அதன் அடியில், "இது பல
தேவராகக் கூறிற்று" என்று குறிப்பெழுதியிருக்கிறார். ‘பல தேவர்’
என்னும் சொற்றொடருக்குக் கணேசய்யர் தமது பொருளதிகாரப்
பதிப்பில் அடிக்குறிப்பாய்ப் பல தேவர் - என்றே உரையெழுதியிருக்கக்
காணலாம். இச்சொற்றொடரை ஒரு சொல்லாகக் கருதிக்
கிருஷ்ணபிரானின் தமயனாகிய பலதேவர் என்று மயங்கக் கூடாது
என்று கருதியே அக்குறிப்பைக் கணேசய்யர் எழுதியுள்ளார்
என்பதறிக.

ஏற்ற வினைச்சொற்கள்

ஒரு சில சொற்களுக்கு ஏற்ற வினைச்சொற்கள் அடுத்து
தரப்பட்டுள்ளன. இவற்றை அறிந்து எழுதுக.