10.
வடசொல் உதவி
சொற்களை இலக்கணத்திற்குப் பயன்படும் வகையில்
பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என
ஒருவகையாகவும், இலக்கியத்திற்குப் பயன்படும் முறையில் இயற்சொல்,
திரிசொல், வடசொல், திசைச்சொல் என மற்றொரு வகையாகவும்
நம் முன்னோர்கள் பாகுபடுத்தி வைத்தார்கள். இங்கே இலக்கிய
வகைச் சொற்களுள் ஒன்றாகிய வடசொல்லைப் பற்றி மட்டும்
ஆராய்வோம்.
வடசொல்லும் திசைச்சொல்தானே என்று சிலர் கருதலாம்.
உண்மையாகவே எண்ணிப் பார்த்தால் வட சொல்லையும் திசைச்
சொல்லாகவே கொள்ள வேண்டும். என்றாலும், நம் முன்னோர்கள்
அதற்குச் சிறப்புக் கொடுக்கும் முறையில் தனியிடம் வகுத்து
வைத்தார்கள்.
வடசொல் பற்பல நூற்றாண்டுகளாகத் தமிழோடு வழங்கி
வந்ததால், கி.மு.4-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தொல்காப்பியரும்
வடசொல்லைத் தமிழில் பயன்படுத்தும் முறையைக் கூறினார்.
கி.பி.13-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த பவணந்தி முனிவரும்
வட சொல்லைத் தமிழ் மொழியில் பயன்படுத்தும் முறையைச்
சொன்னார்.
சங்க நூல்களிலோ வடசொல் மிக மிகக் குறைவாகவே
காணப்படுகிறது. வடமொழி நூல்களில் காணப்படும் சமயக் கருத்துகள்
தமிழகத்தில் புகுந்த காலத்திலும், வடமொழிப் புராணங்கள் தமிழில்
மொழி பெயர்க்கப்பட்ட காலத்திலும் வடசொற்கள் மிகுதியாய்ப்
புகுந்து விட்டன. இடைக்காலத்தில் சைனர்களும், வைணவ
உரையாசிரியர்களும் வட சொற்களையும்
|