பக்கம் எண் :

வடசொல் உதவி 173

கி.பி.13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியி்ல் வாழ்ந்த
பரிமேலழகர் திருக்குறளுக்கு எழுதிய உரையில் கூடிய மட்டும் வடசொல்
நீக்கி எழுதியிருப்பதைக் காணும்போது அவரைப் பாராட்டாமல்
இருக்க இயலவில்லை. கி.பி 13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியினரான
சேனாவரையர், 14-ஆம் நூற்றாண்டினரான நச்சினார்க்கினியர்
முதலான பண்டை உரையாசிரியர்களும் வடசொல் மிகுதியாகக்
கலப்பின்றியே தத்தம் உரைகளை எழுதியிருப்பதைக் காண்கிறோம்.

ஏறக்குறைய 50 ஆண்டுகளாகத் தமிழ் நாட்டில் வட சொற்களை
நீக்கி எழுதும் தனித்தமிழ் இயக்கம் நடைபெற்று வருகிறது.
அவ்வியக்கத்தால் நன்மை மிகுதியாய் ஏற்பட்டிருக்கிறது. இதனால்,
எவரும் வடமொழியை வெறுப்பதாகக் கொள்ளுதல் கூடாது. தமிழ்
மொழியில் எழுதுவது தமிழாக இருத்தல் வேண்டுமென்பதே
தனித்தமிழ் இயக்கத்தின் நோக்கமாகும். தெலுங்கிலும் கன்னடத்திலும் -
ஏன்? - ஆங்கிலத்திலும் தூயநடை இயக்கம் ஒரு காலத்தில்
தோன்றியதுண்டு. ஆங்கில நாட்டில் சுவிப்ட் (
Swift 1667 - 1735)
என்று ஆங்கில எழுத்தாளர் காலத்தில் தூய ஆங்கிலோ சாக்சனில்
எழுத வேண்டும் என்ற தூயநடை இயக்கம் தோன்றியதாம்.
அம்மொழிகளில் அவ்வியக்கம் நீடிக்கவில்லை. ஆனால், அவ்வியக்கம்
தமிழில் மட்டும் வளர்ந்து வருகிறது. நடமாடும் தேய்ப்பு வண்டி என்று
தெருவில் வரும் துணி தேய்ப்புத் தொழிலாளியும் வண்டியில்
எழுதியிருப்பதைக் காண்கிறோம்.

பாஷை என்பதைப் பாடை என்றாக்கி எழுத வேண்டுவதில்லை;
மொழி என்றே எழுதலாம். வடசொல்லுக்குத் தமிழ்சொல் எழுதத்
தெரியாதவர்களும் தமிழறிவற்றவர்களுமே வட சொற்களை மிகுதியாகப்
பெய்து எழுதுகிறார்கள். கூடிய மட்டும் வடசொல்லை நீக்கி எழுதினால்.
தமிழ் நடை மிகவும் இனிமையாக இருக்கும். மேலும் வடமொழிச்
சொற்களைத் தமிழில் தவறாக எழுதுவதையும் தடுக்கலாம்.