பக்கம் எண் :

வடசொல் உதவி 183


நாடுவதே வழக்கமாகக் கொண்டுள்ளமையாலும், தத்தம் சிறப்புப்
பண்புகளை இழந்து தனித்து நின்றியங்கும் ஆற்றலை வற்புறுத்த
இயலாத நிலையில் இருக்குகின்றன. ஆனால், திராவிட மொழிகள்
அனைத்திலும் மிகவும் திருந்திய பண்பட்ட நிலையிலுள்ள
தமிழ்மொழியோ வடசொற்களை அறவே அகற்றித் தனித்தியங்கும்
ஆற்றல் பெற்றிருப்பதோடு தேவைப்படுமானால், அவற்றின் உதவியின்றி
மிகவும் மேம்பட்டு வளமுற்று விளங்கவும் கூடும்."

நாம் இன்றியமையாத இடங்களைத் தவிரப் பெரிதும் வடசொற்களை
நீக்கிப் படிப்போர்க்குப் பொருள் விளங்கும் முறையில் எழுதுவதே
சாலப்பொருத்தமாகும். வடமொழியைக் கூடியமட்டும் நீக்கித் தனித்
தமிழ்ச் சொற்களால் எழுதுவது வடமொழியை வெறுப்பதாகாது என்றுணர்க.
தூய தமிழில் எழுதினால் தமிழ்ச் சொற்கள் வழக்காறு அற்றுப்போகாமல்
இருக்கும். மேலும் தமிழ்மொழி புதுச்சொற்களை ஆக்கும் ஆற்றலையும்
பெறும். இன்னும் பலர் வடசொற்களைத் தமிழில் தவறாகவே எழுதுவதும்
ஒழியும். இது வடமொழிக்கும் நன்மை பயக்கும். ஆங்கிலம் பிறமொழிச்
சொற்களை அளவு கடந்து கலக்க விட்டதால், புதுச் சொற்களை ஆக்கும்
ஆற்றலை இழந்து விட்டதாகக் கூறுவர் மொழி நூலார். எனவே, முயற்சி
செய்தால், கூடிய மட்டும் தூய தமிழில் எழுத முடியும்; எழுதக்கூடும்;
எழுதலாம். பழகவேண்டும். இப்போது படியாதவர்களும் படித்தவர்களை
அணுகித் திருமண அழைப்பு முதலியவற்றைத் தூய தமிழில் எழுதித்
தருமாறு வேண்டுவது மகிழ்ச்சிக்கு உரியது. பெரும்பாலரான மாணவர்கள்
தூய தமிழி்ல் எழுத விரும்புகிறார்கள். இதனால் தூய தமிழ் இயக்கத்தின்
பயன் வீண் போகவில்லை என்பதை அறிகிறோம்.