பக்கம் எண் :

184நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


11.
நெல்லோடு கற்கள்

நெல்லோடு கற்கள் கலந்திருக்கக் காண்கிறோம். நெல்லை மண்
தரையில் காயவைக்கும் போது சிறுகற்கள் இயல்பாகக் கலந்து
விடுவதுண்டு. நேர்மையற்ற வணிகர் சிலர் நெல்லோடு கற்களைச்
சேர்ப்பதும் உண்டு. தகுதியற்ற வணிகர் சிலர் வேண்டுமென்றே
அரிசியில் சிறுசிறு கற்களைக் கலந்து விற்கின்றனர். சிலர் கூலியாள்களுக்குக்
கூலி கொடுத்துப் பெருங் கற்களைச் சிறுசிறு கற்களாக உடைக்கச்
செய்து படிப்படியாகச் சேர்த்து அக்கற்களை அரிசியில் கலந்து
விடுகின்றனர். வேறு சிலர் கூலியாளை அமர்த்தி மண்ணால்
சிறுசிறு உருண்டைகளைச் செய்வித்து அவற்றை உளுந்தில் கலந்து
விற்று மிகுதியான ஊதியம் பெறுகின்றனர்.

அவ்வாறே மொழியில் வேற்று மொழிச் சொற்கள் இயல்பாகக்
கலந்துவிடுவதுண்டு; நேர்மையற்ற வணிகர் செயல்போல ஒரு சிலர்
அயல் மொழிச் சொற்களை வேண்டுமென்றே மொழியில் கலக்க
விடுவதுமுண்டு.

தமிழ் மொழியில் வடசொல் மட்டும் கலந்துவிடவில்லை; வேற்று
மொழிகளின் சொற்களும் கலந்திருக்கின்றன. இக்கலப்பு இயற்கையாயும்
நடந்தது; செயற்கையாயும் நிகழந்தது. போர்ச்சுக்கீசிய மொழியிலருந்து 6
சொற்களும் தெலுங்கிலிருந்து 34 சொற்களும் கன்னடத்திலிருந்து 4
சொற்களும், அரபு, பாரசீக, இந்துஸ்தானி மொழிகளிலிருந்து 411
சொற்களும், ஆங்கிலத்திலிருந்து 486-க்கு மேற்பட்ட சொற்களும்
தமிழில் புகுந்திருப்பதாய்க் காலஞ்சென்ற திவான்பகதூர் பவானந்தம்
பிள்ளை என்பவர் தமது தமிழகராதியின் பின் இணைப்பில்
குறிப்பிட்டுள்ளார்.