பக்கம் எண் :

நெல்லோடு கற்கள் 185

பிறமொழிச் சொற்கள் தமிழ் மொழியில் புகுந்ததற்குத் தமிழ்
நாட்டில் வேற்று மொழியினர் ஆட்சி அடிக்கடி புகுந்ததே காரணமாகும்.
சங்க காலத்தில் முத்தமிழ் மன்னர்கள் தமிழகத்தில்
தத்தமக்குரியனவாயிருந்த பகுதிகளை ஆட்சி புரிந்தார்கள். அதன்
பின்பு தமிழ் நாட்டைக் கி.பி. 3-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம்
நூற்றாண்டு வரையில் பல்லவர்கள் ஆண்டார்கள். அவர்கள்
பிராகிருத மொழியையும் வடமொழியையும் ஆதரித்தவர்கள். களப்பிரர்
என்ற கன்னட இனத்தவர்கள் பல்லவர் ஆட்சிக்கு இடையில் தமிழ்
நாட்டில் புகுந்து கி.பி.300லிருந்து 575 வரையில் சிறிது சிறிதாய்த்
தமிழ் நாட்டையே கைப்பற்றி ஆண்டார்கள். பின்பு பிற்காலச்
சோழர்கள் பல்லவர்களை வென்று தமிழ் நாட்டைக் கி.பி 12- ஆம்
நூற்றாண்டு முடிய ஆட்சி புரிந்தார்கள். இக்காலத்தில் தமிழ் மொழியில்
சமயத் தொடர்பினால் மட்டு மல்லாது சோழப் பெருமன்னர்கள் பல
நாடுகளிலும் கொண்ட பெருவெற்றியாலும் மொழிக்கலப்பு ஏற்பட்டது.
சோழப் பேரரசு தோற்றுவித்த சூழ்நிலையில் பல நாட்டு மக்களும்
தமிழ் மக்களோடு கூட்டுறவு கொள்ள வேண்டியவர்களானார்கள்.
தமிழில் கன்னடம், தெலுங்கு முதலிய மொழிகள் கலப்பதற்குரிய
சமுதாய நிலை சோழரது வெற்றியால் விளைந்தது. ‘வீரசோழிய
உரைகாரர் ‘முருங்கை’ என்னும் சொல் ‘முருங்கா’ என்னும் சிங்களச்
சொல்லின் திரிபு என்பர்’ என்று டாக்டர் ஆ. வேலுப்பிள்ளை ‘தமிழ்
வரலாற்றிலக்கணம்’ என்னும் நூலில் குறிப்பிடுகிறார். இஃது உண்மையில்
ஏற்படக் கூடியதே.

சோழர்களுக்குப் பின்பு பிற்காலப் பாண்டியர்கள் ஏறக்குறைய ஒரு
நூற்றாண்டு ஆண்டார்கள். கி.பி.1311-ல் மாலிக்கபூர் படையெடுத்து
வந்து மதுரையைத் தாக்கினான். கி.பி.1317-ல் குஸ்ருகான் மதுரை மீது
படையெடுத்தான். பின்னர் கியாஸ்-உத்தீன் துக்ளக் காலத்தில் அவன்
மகனும் பிற்காலத்தில் முகமது-பின்-துக்ளக் என்றும் பட்டம் சூட்டிக்
கொண்டு ஆண்டவனுமான உலூகான் 1323-ல் தமிழ்நாட்டின் மீது ஒரு
படையை அனுப்பினான்.