|
தமிழ் மொழியும் மிகவும் தொன்மை உள்ள பெரு மொழியாகும்; உயர்தனிச்
செம்மொழியுமாகும்.
இந்தியாவில் மட்டும் 179 இலக்கிய வளமொழிகளும் 544 கிளை
மொழிகளும் உள்ளன என்று இந்தியநாட்டு மொழி நூலறிஞராய்
விளங்கிய காலஞ்சென்ற சுனிதி குமார் சட்டர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
இம்மொழிகளனைத்திலும் தொன்மையானது தமிழ்மொழி. சென்னை
உயர்நீதி மன்ற நடுவராய் இருந்தவரும் பேரறிஞருமாகிய காலஞ்சென்ற
சதாசிவ ஐயர் அவர்கள், வடமொழியைப் பார்க்கிலும் தமிழ்மொழி
தொன்மையானதாய் இருக்க வேண்டும் என்று சொல்லக்
கேட்டிருக்கிறேன். தமிழில் ஒரு ககரம் இருக்கிறது. வடமொழியில்
இதற்குமேல் மூன்று ககரங்கள் உண்டு. க, ச, ட, த, ப ஆகிய
எழுத்துகளுக்குத் தமிழிலிருப்பதைவிட வடமொழியில் மும்மூன்று
எழுத்துகள் மிகுதியாய் உண்டு. இவை தவிர வேறு எழுத்துகளும்
வடமொழியில் உண்டு. இப்படி வடமொழியில் எழுத்து
வளர்ச்சியுற்றிருப்பதே அம்மொழி, தமிழ் மொழிக்குப் பின்
தோன்றியதைக் காட்டுகிறது. குறைவிலிருந்துதானே வளர்ச்சி தோன்றுவது
இயல்பு. இஃது ஐயரவர்கள் கூறிய காரணம். திரு.வி.க. அவர்கள் தமிழ்
மொழியில் மெல்லொலிகள் மிகுந்திருப்பதே அதன் தொன்மைக்குக்
காரணம் என்றார். இற்றைக்கு 5,000 ஆண்டுப் பழமையுடையனவாய்க்
கருதப்படும் ஹரப்பா, மொகஞ்சொதாரோ புதைபொருள்களில் இருக்கும்
உருவ எழுத்துகளைப் படித்த ஈராஸ் பாதிரியார், அவை தமிழ் எழுத்துகள்
என்றும், ஆதலால், தமிழ்மொழி தொன்மை வாய்ந்தது என்றும்
குறிப்பிட்டிருக்கிறார்.
தொல்காப்பியம் கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்பர்.
இதுதான் தமிழிலுள்ள பண்டைய உயர்ந்த இலக்கணம். இத்தகைய
சீரிய கூரிய தமிழிலக்கணம் தோன்ற வேண்டுமென்றால், இதற்குக்
குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாவது தமிழ்மொழி தோன்றிச்
செம்மை நிலையடைந்திருத்தல் வேண்டும்.
|