என்று கூறியிருப்பதைக் காண்க. வெகுளாமை என்னும் அதிகாரத்தின்
9-ஆவது குறட்பாவிற்கு, "தவம்செய்யுமவன் தன் மனத்தால் வெகுளியை
ஒரு காலும் நினையானாயின்" என்று பரிமேலழகர் உரையெழுதியிருப்பதும்
காணலாம். தொல்காப்பியச் சொல்லதிகார உரையாசிரியரான
தெய்வச்சிலையாரும் வேற்றுமையை விளக்குகையில் ஒருகால்
என்றே எழுதியிருப்பதை இந்நூலின் 78 ஆம் பக்கத்தில்
பார்க்கவும்.
தமிழ் பேசும் பகுதி என்றுதான் எழுதவேண்டும். இரண்டாம்
வேற்றுமைத்தொகையில் வல்லெழுத்து மிகக் கூடாது. தமிழ்ப்பற்று,
தமிழ்ப்புலவர். தமிழ்ப்பேராசிரியர் என்னும் தொடர்களில் வரும்
வலிமிகும்; ஏனெனில், இம் மூன்றும், வேற்றுமை உருபும் பயனும்
உடன் தொக்க தொகைகளாகும்.
மிகப் பேசினார் என்றும், மிக்க பேச்சு என்றும் எழுத வேண்டும்.
மிக என்பது அகர ஈற்று வினையெச்சமாதலால் வலிமிகும்; மிக்க என்பது
பெயரெச்சமாதலால் வலி மிகாது.
ரயில்வே தொழிலாளர் என்றிருப்பது நன்று.
வலிமிகா விதிகளின் தொகுப்பு
வல்லெழுத்து மிகக் கூடாத இடங்களைக் கீழ்வரும் விதிகளால்
மிகமிக எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.
1. அது, இது, எது; அவை, இவை, எவை; அன்று, இன்று,
என்று; அத்தனை, இத்தனை, எத்தனை; அவ்வளவு, இவ்வளவு,
எவ்வளவு; அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு; படி ஆறு சேர்ந்து
வரும் வினையெச்சங்கள்; ஒரு, இரு, அறு, எழு; இரண்டு, மூன்று,
நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, ஒன்பது; நீ, பல, சில ஆகிய இச்சொற்களுக்குப்
பின் வருமொழி முதலில் க,ச,த,ப வருக்கம் இருந்தால், வல்லெழுத்து
மிகாது.
|