பக்கம் எண் :

248நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

குறிப்பு :

பாடிகாவல் என்பது போல ஊர்காவல் என்னும் தொடர்
வலிமிகாமலே வரும்.

கீழ்+கடல் = கீழ்கடல், கீழ்க்கடல் என்றும்,
கீழ்+காற்று = கீழ்காற்று, கீழ்க்காற்று

என்றும் இருவகையாக வரும்.

பதினெண் கீழ்+கணக்கு. = பதினெண் கீழ்கணக்கு,
பதினெண் கீழ்க்கணக்கு

என்று இருவகையாகவும் வரலாம். ஆனால், தொல்காப்பியச்
செய்யுளியலில் 470-ஆவது நூற்பா உரையில் பேராசிரியர்
பதினெண் கீழ்க்கணக்கினுள்ளும் என்றும் எழுதியுள்ளார். ஆதலால்,
கீழ்க்கணக்கு என்று எழுதுவது மரபாயிற்று.

மெய்காவலர், மெய்காப்பாளர் - இவை இப்படித்தான் வரவேண்டும்.
மெய்காவலர், மெய்காப்பாளர்
(Bodyguard). இவை இரண்டாம்
வேற்றுமைத் தொகையாதலால் வல்லெழுத்து மிகாது. மெய்க்காவலர்,
மெயக்காப்பாளர் என்றால் உண்மையான காவலர், காப்பாளர் என்றே
பொருள்பாடும். ஆதலால், மெய்காவலர், மெய்காப்பாளர் என்றே
வல்லெழுத்து மிகாமல் எழுத வேண்டும் என்பதறிக.

இப்பட்டியலை ஒருவர் கூர்ந்து நோக்கி நன்கு படித்து நினைவு
வைத்துக்கொண்டால், வலிமிகாத இடங்களைத் தெரிந்து பிழையின்றி
எழுதலாம்.