|
தெருவில் + ஓடினான் = தெருவிலோடினான்.
இதுவும் இயல்பு புணர்ச்சியில் சேரும். நிலைமொழியின்
ஈற்று மெய்யெழுத்துடன் வருமொழி முதலில் வரும் உயிர் எழுத்துச்
சேர்ந்து வருவதையும் இயல்பு புணர்ச்சியாகவே கொள்ளவேண்டும்.
தெருவில் ஓடினான் என்று பிரித்து எழுதுவதே இக்காலத்தில்
நல்லது. நன்றாய்+இருக்கும் என்னும் இரு சொற்கள் சேரும்
போது நன்றாயிருக்கும் என்றே வரும்.
விகாரப்புணர்ச்சி மூன்று வகைப்படும்.
|
விகாரப்புணர்ச்சி
|
|
தோன்றல்
|
திரிதல்
|
கெடுதல்
|
வாழை+பழம் என்னும் இரண்டு சொற்கள் சேரும்போது
இடையில் ‘ப்’ தோன்றும். வாழைப்பழம்-தோன்றல். ஓர் எழுத்துப்
புதிதாகத் தோன்றியிருக்கிறது. வல்லெழுத்து மிகுதல், உடம்படுமெய்
வருதல் முதலியவை தோன்றல் என்னும் விகாரப் புணர்ச்சியின்
பாற்படும். விகாரம் என்னும் சொல்லுக்கு மாறுபாடு என்பது பொருள்.
பல்+பொடி = பற்பொடி - திரிதல்
இங்கே ‘ல்’ என்னும் மெய்யெழுத்து ‘ற்’ ஆக மாறியது.
அணில்+பிள்ளை = அணிற் பிள்ளை. ஒன்று வேறொன்றாய் மாறுதல்
திரிதல் எனப்படும்.
மரம் + நாய் = மரநாய் - கெடுதல்.
இங்கே ‘ம்’ என்னும் எழுத்துக் கெட்டது. உள்ளது அழிந்து
போதலைக் கெடுதல் என்பர்.
|