"வரையார் என்றதனால் உடம்படுமெய் கோடல் ஒரு தலையன்று."
"கிளி அரிது. மூங்கா இல்லை என வரும்."
- நச்சினார்க்கினியர் உரை
(மூங்கா-கீரியுள் ஒரு சாதி)
இவ்வாறு தொல்காப்பிய உரையாசிரியர்கள் இருவரும் எல்லா
இடங்களிலும் உடம்படுமெய் வர வேண்டுவதில்லை என்று கருதினர்.
ஆதலால், இக் காலத்தில் கண்ட இடமெல்லாம் உடம்படுமெய்
சேர்த்தெழுத வேண்டுவதில்லை என்பதை அறிக. அப்படி எழுதினால்
பொருள் மயக்கம் ஏற்படும்.
‘பெரியவிடம்’ என்னும் தொடர் ‘பெரிய விஷம்’ என்றும்,
‘பெரிய இடம்’ என்றும் இருபொருள் தரும் பாட்டில் சிலேடைப்
பொருள் தருவதற்கு இது பயன்படும். உரைநடையில் இப்படி
எழுதுவது தவறாகும். ‘பெரிய இடம்’ என்று பொருள் தருவதற்குப்
‘பெரியவிடம்’ என்று எழுதாமல் உடம்படு மெய் இன்றியே எழுதுக.
‘வந்த வலவன்’ என்னும் தொடரானது ‘வந்த தேர்ப்பாகன்’ என்றும்,
‘வந்த நண்டு’ என்றும் பொருள்படும். வலவன் - தேர்ப்பாகன்.
அலவன்-நண்டு. ‘வந்த நண்டு’ என்று பொருள் தர வேண்டுமாயின்,
‘வந்த அலவன்’ என்றே எழுதுக.
‘அவனையடித்தான்’, ‘கறியேயில்லை’ என்று எழுதாமல்
அவனை அடித்தான் என்றும், கறியே இல்லை என்றும் எழுதுக.