பக்கம் எண் :

274நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


22.
சொற்றொடர்ப் பிரிப்புத் தவறுகள்

சொற்றொடர்களைச் சொல்லும் போது இசையறுத்துக்
கூறினால்தான் பொருள் தெளிவாக விளங்கும். நன்னூலாசிரியர்,
"புணர்மொழி இசைத்திரிபால் தெளிவு எய்தும் என்ப" என்று
குறிப்பிட்டுள்ளார். ‘செம்பொன் பதின்பலம்’ என்னும் தொடரைச்
செம்பொன் பதின் பலம் என்று இசை அறுத்துக் கூறினால்,
இத்தொடரானது செம்பொன் பத்துப் பலம் என்று பொருள்படும்.
இத்தொடரையே செம் பொன்பதின்பலம் என்றால், இது செம்பு ஒன்பது
பலம் என்னும் பொருள் தரும். கூறும் பொழுதே தெளிவுக்காகக்
சொற்றொடர்களை இசையறுத்துச் சொல்ல வேண்டுமென்று
வற்புறுத்தினால், எழுதும் பொழுது சொற்றொடர்களைச் சரியான
முறையில் பிரித்தெழுத வேண்டும் என்று மிகுதியாக வற்புறுத்த
வேண்டுமெனக் குறிப்பிட வேண்டுவதில்லை. இன்று வெளிவரும்
நாளிதழ்கள், வார வெளியீடுகள், பாட நூல்கள் இவற்றில்
சொற்றொடர்களைத் தவறாகப் பிரித்து அச்சிடுதலை மிகுதியாக்
காண்கிறோம். சொற்றொடர்ப் பிரிப்பில் ஏற்படும் தவறுகளை நீக்குவதற்குச்
சில வழிகளும் விதிகளும் இங்கே தரப்பட்டுள்ளன. இங்குக்
கூறப்படும் விதிகளைப் பின்பற்றி எழுதினால், சொற்றொடர்களைப்
பிரிப்பதில் நிகழும் தவறுகளை நீக்கலாம்.

புத்தியில்லாதவன் என்னும் சொற்றொடரைப் பிரிப்பதில் ஒன்றுக்கு
ஓன்று மாறுபடப் பொருளுண்டாவதைக் காணலாம். புத்தி இல்லாதவன்
என்று பிரித்தால் அறிவற்றவன் என்றும், புத்தியில் ஆதவன் எனப்
பிரித்தால் புத்தியில் சூரியனைப்போல ஞானம் உள்ளவன் என்றும்
அத்தொடர் பொருள் தரும்.