பக்கம் எண் :

வாக்கிய வகைகளும் அமைக்கும் முறைகளும் 281

23.
வாக்கிய வகைகளும்
அமைக்கும் முறைகளும்

எழுத்தும் சொல்லும் வாக்கியத்திற்குக் கருவிகள்

பன்னீராண்டு நிகழ்ந்த பஞ்சத்துக்குப் பின் நாடு மலிய மழை
பெய்தது. பெய்த பின்றைப் பாண்டியன், "இனி நாடு நாடாயிற்று.
ஆகலின், நூல் வல்லாரைக் கொணர்க" என்று எல்லாப் பக்கமும்
ஆட்போக்கினான். ஏவலர் எழுத்ததிகாரம் வல்லாரையும்
சொல்லதிகாரம் வல்லாரையும் தலைப்பட்டுக் கொணர்ந்து,
"பொருளதிகாரம் வல்லாரை எங்கும் தலைப்பட்டிலேம்" என்று
மன்னனிடம் கூறிய போது, அவன், எழுத்ததிகாரமும்
சொல்லதிகாரமும் பொருளதிகாரம் அறிவதன் பொருட்டன்றே!
பொருளதிகாரம் பெறேமெனின் இவை பெற்றும் பெற்றிலேம்
என்று கவன்றான்" என இறையனார் அகப்பொருள் கூறுகின்றது.
அஃது உண்மைதானே! எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும்
பொருளதிகாரத்தை அறிவதற்குள்ள கருவிகள். அது போலவே
எழுத்துப்பிழை, சொற்பிழை, சந்திப்பிழை, சொற்பிரிப்புப்பிழை
முதலியனவெல்லாம் வாக்கியத்தைப் பிழையின்றி எழுதுவதற்காகவே
அறிந்து கொள்கிறோம். எழுத்தும் சொல்லும் வாக்கியத்திற்குக் கருவிகள்
என்பது கூறாமலே நன்கு விளங்கும்.

வாக்கியத்தில் பலர் செய்யும் தவறுகள்

வாக்கியங்களை எழுதும்போது மாணவர்களும் செய்தியாளர்களும
இதழாசிரியர்களும் எழுத்தாளர் சிலரும் இலக்கணப் பயிற்சி
இல்லாமையால் பற்பல தவறுகள் செய்யக் காண்கிறோம். ஒருமை
பன்மை வினைமுற்றுப் பிழைகள் நாளிதழ்களில் மலிந்து இருக்கக்
காணலாம்.