பக்கம் எண் :

282நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

ஆங்கிலத்தில் இப்பிழையைச் செய்தால் நம்மவர்களே எள்ளி
நகைப்பார்கள். ஆனால், தமிழில் "கட்டுப்பாடுகள் இனிக்கிடையாது"
என்று எழுதினால் தவறு என்று நாம் கவலைப் படுவதில்லை.
"கட்டுப்பாடுகள் இனிக்கிடையா" என்றிருக்கவேண்டும். சிலர் அப்படி
எழுதுவதில் உயிரிருப்பதாகவும் கருதிவிடுகின்றனர். பேச்சு மொழியில்
தவறுகள் செய்கிறோம். கவலையில்லை. எழுத்து மொழியில் தவறு
செய்வது மொழிக்குச் செய்யும் தீமை என்றுதான் கூறவேண்டும்.

வாக்கியத்தில் முழுக்கவனம் செலுத்துக

நாகரிக வளர்ச்சியின் சின்னம் உரைநடைப் பெருக்கம். செய்யுள்
பண்டை மொழியின் சிறப்பு. இன்றைய மொழியின் சிறப்பு இக்
காலத்துக்கு ஏற்றவாறு உரைநடை நூல் பெருகுவதேயாகும். விஞ்ஞான
அறிவு பெருகப் பெருக, உரைநடை நூல்களுக்குத் தேவையும் மதிப்பும்
பெருகும். விஞ்ஞானம் வளர்ந்திருக்கும் இக் காலத்தில் உரைநடைதான்
எழுத முடியுமேயன்றிச் சிறந்த செய்யுள் இயற்றுவது அரிதாகும்.
இன்று செய்யுளைப் படித்து இன்புறுவதற்குப் பலர் அஞ்சி நடுங்கி
அலறுவது காண்கிறோம். பலர் செய்யுளை வெறுப்பதையும்
கண்கூடாகப் பார்க்கிறோம். ஒரு சிலரே - செய்யுளின்பத்தில் பழகிய
ஒரு சிலரே - மனப்பண்பை வளர்ப்பதற்குச் செய்யுளைப் படிக்கின்றனர்.
இக்காலத்தில் அறிவு வளர்ச்சிக்குக் காரணமான உரைநடையில்
அறிஞர்கள் கவனம் செலுத்துவது இயற்கையே. உரைநடையில்
கவனம் செலுத்தும் இக்காலத்தில் நாம் உரைநடைக்கு அடிப்படையாக
உள்ள வாக்கியத்தில் முழுக்கவனம் செலுத்த வேண்டுவது
இன்றியமையாதது.

வாக்கிய வரலாறு

தமிழ்மொழியில் கி.பி.8-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட
இறையனார் களவியல் உரையில் வாக்கியங்கள் நல்ல முறையில்
அமைந்திருக்கக் காணலாம். அந்த உரை நடை, செய்யுள் நடை