பக்கம் எண் :

வாக்கிய வகைகளும் அமைக்கும் முறைகளும் 283


போல இருந்தாலும், வாக்கியங்களின் அமைப்புச் சிறந்திருக்கப்
பார்க்கிறோம். கி.பி. 13, 14-ஆம் நூற்றாண்டுகளிலே வாழ்ந்த
உரையாசிரியர்களால் வாக்கிய அமைப்பு வளர்ச்சியுற்றது எனலாம்.
19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, மிகுந்த வளர்ச்சியுற்றுள்ள
ஆங்கில மொழியின் கூட்டுறவால், தமிழில் வாக்கிய அமைப்புப்
பண்பட்டு வரத் தொடங்கியது; இன்று நன்னிலையில் வளர்ந்துகொண்டு
வருகிறது. இவ்வளர்ச்சிக்கு ஆங்கில மொழியின் கூட்டுறவே காரணம்.

வாக்கியம் என்றால் என்ன?

வாக்கியத்தைப் பிழையின்றி எழுதுவதற்கு வாக்கியம் என்றால்
என்ன என்பதைப் பற்றியும், வாக்கிய வகைகள் இவை என்பதைப்
பற்றியும், வாக்கியங்கள் இன்னவாறு அமைய வேண்டும் என்பதைப்
பற்றியும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

வாக்கியம் என்பது வடசொல் என்று கேட்கும்போது
வியப்படையலாம். ‘வாக்கியத்திற்குத் தமிழில் சொல் இல்லையா?’
என்று ஒருவர் கேட்கலாம். வாக்கியத்தைத் தமிழில் முற்றுச்
சொற்றொடர் எனலாம். வாக்கியம் என்பதே பெரிதும் வழங்கி
வந்திருப்பதால், நாம் அச்சொல்லை ஏற்றுக் கொள்வதால் தவறு இல்லை.
முற்றுச் சொற்றொடர் என்றால் இன்று அது பலருக்கும் புரியாத
புதிராக இருக்கும். வாக்கியம், உரைநடையில் மிக மிக இன்றியமையாத
பகுதியாகும்.

வாக்கியம் என்பது ஒரே ஒரு முழுக்கருத்தைத் தெரிவிக்கும்
சொற்கூட்டமாகும். ஒரு வாக்கியத்தில் இரு வேறு கருத்துகள் இருத்தல்
கூடாது. ஒவ்வொரு வாக்கியத்திலும் எழுவாய், பயனிலை,
செயப்படுபொருள் ஆகியவை இருக்கும். சில வாக்கியங்களில் எழுவாய்
மறைந்து வருதலுமுண்டு.

1. ‘நாளை வா.’ 2. ‘இளமையிற் கல்.’
3. ‘இரப்பவர்க்கு இட்டு உண்ணுங்கள்.’