பக்கம் எண் :

வாக்கிய வகைகளும் அமைக்கும் முறைகளும் 285


இருக்கலாம். இஃது ஏமாற்றும் வாக்கியம்; மயக்கும் வாக்கியமுமாகும்.
‘செய்யப்பட்டவை’ என்னும் சொல் வரைக்கும் வேறு நினைக்கிறோம்.
‘அல்ல’ என்னும் சொல்லைப் படித்த பின்னரே உண்மையை
உணருகிறோம். இப்படி எழுதுவது வாணிகத்தந்திரம். "எண்ணெயில்"
அல்லது "டால்டாவில்" செய்யப்பட்டவை என்றிருந்தால் பொருள்
தெளிவாக இருக்கும். "நீங்கள் சொல்லுவது பச்சைப் பொய்" என்று
சொல்லாமல் நாகரிகமாய் கூறும் பொருட்டு "நீங்கள் கூறுவது
உண்மைக்கு மாறானது" என்று சொல்கிறோம். இவ்வாறு கூறுவது வேறு;
மயக்கும் வாக்கியம் வேறு.

தமிழ் மொழியில் வாக்கியம் பிழையில்லாமல் இருக்கலாம். அதில்
கருத்து முடியாமல் இருப்பதுண்டு. இப்படிக் கருத்து முடியாமல்
மற்றொரு கருத்தைத் தழுவி நிற்கும் எச்சக் கருத்துள்ள வாக்கியமும்
உண்டு. ‘நானும் வருகிறேன்’ என்பது இந்த வகையான வாக்கியம்.
உம்மையால் இத்தன்மை உண்டாகிறது. இதனை எச்ச வாக்கியம்
எனலாம். இத்தகைய வாக்கியம் தமிழில் மிகமிக அருகி வரும்.

வாக்கிய வகைகள்
கருத்து வகை

கருத்தைப் பொறுத்து ஒருவகையாகவும், அமைப்பை ஒட்டி
மற்றொரு வகையாகவும் வாக்கியங்களைப் பிரிக்கலாம். கருத்தைக்
கொண்டு செய்தி
(Statement) வாக்கியம் என்றும், வினா (Interrogation)
வாக்கியம் என்றும், விழைவு
(Desire) வாக்கியம் என்றும் உணர்ச்சி
(Exclamation) வாக்கியம் என்றும் பிரிப்பது ஒரு வகை. விழைவு
வாக்கியமானது வாழ்த்தையோ கட்டளையையோ வேண்டுகோளையோ
சபித்தலையோ தெரிவிக்கும்.

1. செய்தி வாக்கியம்

முயற்சி திருவினையாக்கும்.
மழை பெய்தால் நெல் விளையும்.