|
முதலில் பயனிலையைக் கண்டு பிடித்து, யார் என்று
கேட்டால், உயர்திணை எழுவாயைக் கண்டு பிடிக்கலாம்; எது
என்று கேட்டால், அஃறிணை எழுவாயைக் கண்டு பிடிக்கலாம்.
கந்தன் - உயர்திணை எழுவாய்.
பறவை - அஃறிணை எழுவாய்.
என்ன செய்தான் கந்தன் என்று கேட்டாலும், பறவை என்ன
செய்தது என்று கேட்டாலும், அந்த அந்த எழுவாய்க்கு உரிய
செயப்படுபொருளைக் கண்டுபிடித்து விடலாம்.
முதல் வாக்கியத்துக்கு உரிய செயப்படுபொருள் ‘திருக்குறள்’
என்பது.
பறவை கூடு கட்டுகிறது என்னும் வாக்கியத்தில் உள்ள செயப்படு
பொருள் ‘கூடு’ என்பது.
சில வாக்கியங்களில் செயப்படுபொருள் இல்லாமலும் இருக்கும்.
இராமன் நடந்தான்.
ஆசிரியர் ஒருவர், ‘மாரியல்லது காரியம் இல்லை’ என்னும்
வாக்கியத்தைச் சொல்லி, ஒரு மாணவனை நோக்கி, "எழுவாய் கூறு"
என்றாராம்; எழுந்திருப்பாய் என்று பொருள் உண்டாகுமாறும், எழுவாய்
கூறு என்று பொருள் தரும்படியாகவும் இருபொருள் கொடுக்கும்படி
கூறினாராம். மாணவனுக்கு எழுவாயைக் கண்டு சொல்லத் தெரியவில்லை.
உடனே அவர் பயனிலை என்றாராம்; நீ பயன் இல்லை என்றும்,
பயனிலையாவது சொல் என்றும் இரு பொருள் தருமாறு சொன்னாராம்.
‘இல்லை’ என்பது பயனிலை. எது இல்லை? காரியம் இல்லை.
ஆதலால், ‘காரியம்’ என்பது எழுவாயாகும்.
பயனிலை என்பது வேறு; வினைமுற்று என்பது வேறு. முற்று
வினையே வினைமுற்றாகும். பயனிலை என்பது பெயராகவும்
|