பக்கம் எண் :

வாக்கிய வகைகளும் அமைக்கும் முறைகளும் 299


அமைப்புடையுதும் தமிழ்மொழியே" என்றார். தமிழ்நாட்டில் பிறந்து
வளர்ந்து தமிழை நன்கு கற்றுத் தமிழரைப் போல எழுதவும்
பேசவும் வல்லவராய் விளங்கிய அமெரிக்கர் ஒருவர், தம்மிடம்
தமிழ்மொழி எண்ணுதற்கும் பேசுவதற்கும் எந்த ஐரோப்பிய மொழியையும்
விடச் சிறந்தது என்று கூறியதாய் விட்னி என்ற ஐரோப்பிய அறிஞா
குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு ஐரோப்பிய அறிஞர்கள் பாராட்டும்
முறையில் தமிழ் வாக்கியத்தில் எழுவாய் முதலிலும், செயப்படுபொருள்
இடையிலும், பயனிலை இறுதியிலும் பொதுவாக மனிதன் எண்ணுகிற
முறையில் அமைந்திருப்பது, தமிழ் வாக்கிய அமைப்பில் காணப்படும்
தனிச்சிறப்பாகும். செய்யுளில் இம்முறை மாறிவருவதுண்டு. செய்யுள்
மொழி வேறு; உரைநடை மொழி வேறு.

இசைவு (Concord or Agreement)

வாக்கியத்தில் பயனிலையானது எழுவாயுடனும் திணை, பால்,
எண், இடம், இவற்றுடனும் இசைந்திருக்க வேண்டும்.

உயர்திணை எழுவாயாக இருந்தால் உயர்திணைப் பயனிலையும்,
அஃறிணை எழுவாயாக இருந்தால் அஃறிணைப் பயனிலையும்
வரவேண்டும். எழுவாய் மரியாதைப் பன்மையாய் இருந்தால்,
பயனிலையும் மரியாதைப் பன்மையாய் இருக்கவேண்டும்.

கண்ணன் கடைக்குப் போனான்.

வள்ளி விளையாடுகிறாள்.

நண்பர்கள் கூடிப் பேசுகிறார்கள்.

வண்டி ஓடுகிறது.

வண்டிகள் ஓடா.

பழங்கள் சிறியனவாய் இருக்கின்றன.

அவர் தம் வீட்டிலிருந்து இதை எடுத்துக் கொடுத்தார்.