|
வளமான ஊர்களே இப்பகுதியில் கிடையாது என்று பலர்
எழுதுகின்றனர். இது தவறு ஊர்கள் கிடையா என்க. பலவின்பால்
எழுவாய்க்கு ஏற்றவாறு பலவின்பால் வினைமுற்று வர வேண்டும்.
ஊர் என்னும் எழுவாய் ஒருமையாக இருந்தால் கிடையாது என்று
ஒன்றன்பாலுக்கு ஏற்றவாறு ஒன்றன்பால் வினைமுற்று வரும்.
மக்கள் கிடையாது என்று பலர் நாளிதழ்களில் எழுதக்
காண்கிறோம். மக்கள் கிடையாது என்று எழுதுவது தவறு. மக்கள்
கிடையார் என்று எழுத வேண்டும். மக்கள் இல்லை என்றும் எழுதலாம்.
இல்லை என்னும் குறிப்பு வினைமுற்று ஐம்பால்களுக்கும்
மூவிடங்களுக்கும் பொதுவாக வரும். கிடையார் என்பது
உயர்திணைக்குரிய வினைமுற்றாகும்.
திணை விரவி முடிதல்
ஒரு வாக்கியத்தில் அஃறிணை எழுவாய்கள் பல இருக்குமானால்
அவை அஃறிணைப் பன்மை வினைமுற்றைக் கொண்டு முடியும்.
உயர்திணை எழுவாய்கள் பல இருப்பின் அவை உயர்திணைப்
பன்மை வினைமுற்றைக் கொண்டு முடியும். ஒரு வாக்கியத்தில்
அஃறிணை எழுவாய்களும் உயர்திணை எழுவாய்களும் விரவி வந்தால்
என்ன செய்வது? உயர்திணை எழுவாய்கள் மிகுதியாக இருக்குமானால்
பலவின்பால் வினை முற்றும் கொண்டு முடிவது பண்டைய மரபு.
வீரரும் யானையும் குதிரையும் தேரும் சென்றன. -
இவ்வாக்கியத்தில் அஃறிணை எழுவாய்கள் மிகுதியாக
இருப்பதால் பலவின்பால் வினைமுற்று வந்திருத்தல் காண்க.
பார்ப்பார், முனிவர்கள், பெண்கள், பசுக்கள்
இவ்வாசிரமத்தில் இருக்கிறார்கள்.
|