பக்கம் எண் :

வாக்கிய வகைகளும் அமைக்கும் முறைகளும் 301

இவ்வாக்கியத்தில் உயர்திணை எழுவாய்கள் மிகுதியாய்
இருப்பதால் பலர்பால் வினைமுற்று வந்திருத்தலைக் காணலாம்.

உயர்திணை எழுவாயும் அஃறிணை எழுவாயும் சமமாக இருந்தால்
என்ன செய்வது? உயர்வு கருதினால் உயர்திணை வினைமுற்றையும்,
இழிவு கருதினால் அஃறிணை வினை முற்றையும் பயன்படுத்தலாம்.

மனிதர்களும் குதிரைகளும் வந்தார்கள்.
மூர்க்கனும் முதலையும் கொண்டதுவிடா.

ஆனால், இக்காலத்தில் இப்படி எழுத வேண்டுவதில்லை,
பிரித்தெழுதலே நன்று ‘குதிரைகளோடு மனிதர்கள் வந்தார்கள்’
என்றெழுதலாம். ‘மனிதர்களோடு குதிரைகள் வந்தன’ என்று
எழுதலாம். ‘மூர்க்கனும் கொண்டது விடான்; முதலையும் கொண்டது
விடாது’ என்றாவது, ‘மூர்க்கனும் முதலையும் கொண்டது விடுவதில்லை’
என்றாவது எழுதலாம். இவ்வாறு எழுதுவதே இக்காலத்துக்கு ஏற்றது.

மறுமலர்ச்சி வாக்கியங்கள்

இக்காலத்தில் கீழ்வருவன போன்ற வாக்கியங்களை
எழுதுகிறார்கள். இத்தகைய வாக்கியங்களுக்கு மறுமலர்ச்சி வாக்கியங்கள்
என்று பெயரிடலாம். வாக்கியங்களைப் பாருங்கள்.

1. நம் நாட்டு வள்ளுவர் செம்மையான வழிகாட்டும்
நல்லறிஞர்; வையத்தில் வாழ்வாங்கு வாழும் வகைகள்
எல்லாவற்றையும் வகுத்துக் கூறுகிறார். அதற்காக அவர்
தேடுகிறார் ஒரு சான்றோனை. சான்றோனைத் தேடும் முயற்சியில்
அவர் சொல்கிறார்.

"சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி"
என்று.