பக்கம் எண் :

304நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

(1) உரையாசிரியராகிய ‘சேனாவரையர், தன்னென்றது
தன்னுடைய ஒற்றுமையுடைய பொருளை" என்றும், "அம்மயக்கம்
(வேற்றுமை மயக்கம்) இருவகைப்படும், பொருள் மயக்கமும் உருபு
மயக்கமும் என," என்றும் தொல்காப்பியச் சொல்லதிகார உரையில்
இம்மறுமலர்ச்சி வாக்கியங்கள் போன்றவற்றை அருகி எழுதியிருப்பதைக்
காண்கிறோம்.

(2) ‘இவனுக்கு ஆண்குழுவினுள் மிக்காரும் இல்லை ஒப்பாரும்
இல்லை இழிந்தோரல்லது.’ (திருக்கோவையார் - முதல் செய்யுளுக்கு
எழுதிய பேராசிரியர் உரை.)

(3) உயர்திணைப் பெயர் என்னாது, ‘மருங்கின்’ என்றார்
உயர்திணை விரவுப் பெயர் அடங்குதற்கு’. (நச்சினார்க்கினியர் -
சொல் 42 உரை)

பெரும்பான்மையாக வினைமுற்றில் முடியும் வாக்கியங்களே
எல்லா உரையாசிரியர்களாலும் எழுதப்பட்டுள்ளன. அவ்வாறே
பிற்கால ஐரோப்பியத் தமிழறிஞர்களும் எழுதியுள்ளார்கள். ஆதலால்,
இக்கால மறுமலர்ச்சி வாக்கியங்கள் வழக்கில் ஓரளவு வந்து
கொண்டிருக்கின்றன. மாணாக்கர்கள் தேர்வுக்குரிய விடைத்தாள்களில்
மறுமலர்ச்சி வாக்கியங்களை எழுதுவது கூடாது; அப்படி எழுதினால்
தேற மாட்டார்கள்; கற்றுத் தேறி முடிந்த பின்பு வேண்டுமானால்
எழுதலாம். மொழியில் எளிதில் மாறுதல்களை உண்டாக்குவது
இயலாது. மாறுதல்களை மொழியில் ஏற்றுக் கொள்வதற்குச் சில
நூற்றாண்டுகள் செல்லும்; பல நூற்றாண்டுகளும் செல்லும். காலமே
முடிவு செய்யும்.