பிழையின்றி நல்லதமிழ் எழுத ஓரளவு இலக்கண அறிவு
மிகமிக இன்றியமையாதது என்பதை எவரும் ஏற்றுக் கொள்வர்.
முன்னே கூறியவாறு ஒரு மொழியின் உயிராக விளங்குவது
வாக்கியமே ஆகும். ஒரு மொழியின் உச்சரிப்பானது காலநிலையால்
மாறுபடலாம். முயற்சிச் சுருக்கத்தால் சொற்கள் சிதைந்து வேறுபடலாம்.
ஆனால், ஒரு மொழியின் வாக்கிய அமைப்பு மட்டும் மாறுபடுவதில்லை.
இது மொழிநூல் வல்லுநர் பலப்பல மொழிகளை ஆராய்ந்து கண்ட
உண்மை. பிறமொழிச் சொற்களைச் சேர்த்துத் தமிழ் மொழியில்
எழுதினாலும் தமிழ் மொழியின் வாக்கிய அமைப்பு முறை
மாறவே மாறாது.
"என் ஒய்ப், பேமிலி வேயில் இருப்பதால், நான் ஒட்டலில்
எர்லியாகச் சாப்பாடு சாப்பிட்டு, அர்ச்சண்டாகப் பஸ் ஸ்டாண்டுக்கு
ஓடிக் காரை பிடித்துப் புஷ் பண்ணி உள்ளே நுழைந்து, சீட்டைப்
பிடித்து உட்கார்ந்து போனாலும், ஆபீசுக்கு டெய்லி லேட்டாகப்
போகிறேன்" என்னும் வாக்கியத்தைப் பாருங்கள். இந்த வாக்கியத்தில்
14 சொற்கள் ஆங்கிலச் சொற்களாக இருப்பினும், வாக்கியம் தமிழ்
வாக்கிய அமைப்பு முறையைப் பின்பற்றி வந்திருப்பதைக் காணலாம்.
நாம் வாக்கிய அமைப்பினால் ஓரினமொழிகளைக் கண்டு
பிடிக்கலாம். தமிழ் வடமொழியிலிருந்து வந்தது என்று தவறாக
நினைக்கிறவர்களுக்கு இந்த உண்மையைப் புலப்படுத்தி, ‘நீங்கள்
எண்ணுவது தவறு’ என்று அறிவுறுத்தலாம். தமிழர்கள் சில ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு கங்கைக் கரையில் வாழ்ந்து வந்த காலத்தில்
பேசிய அல்லது எழுதிய தமிழ் வாக்கிய அமைப்பு அதன் சிறப்பு
கருதி, வட இந்திய மொழியிலும் புகுத்தப்பட்டுள்ளது.
‘மை உஸ்கா கர் கயா’ என்பது இந்தி வாக்கிய அமைப்பு.
‘நான் அவனுடைய வீட்டுக்குப் போனேன்’ என்பது அதற்கு நேரான
தமிழ் வாக்கியம்.
|