|
‘முஜே ஏக் கிளாஸ் கரம் சாய் லாவோ’ என்பது இந்தி வாக்கியம்.
‘எனக்கு ஒரு குவளை சூடான தேநீர் கொண்டு வா’ என்பது அதற்கு
நேரான தமிழ் வாக்கியம்.
‘ராம்கோ ஏக் ரூப்யா தோ’ என்பது இந்தி வாக்கியம். ‘ராமனுக்கு
ஒரு ருபாய் கொடு’ என்பது அதற்கு நேரான தமிழ் வாக்கியம்.
தமிழ் வாக்கியம் அமைப்புப் போலவே இந்தி வாக்கிய
அமைப்பும் உள்ளது. தமிழ் வாக்கிய அமைப்பு வட இந்திய
மொழியாகிய இந்தியில் புகுந்து விட்டதாக மொழி நூல் வல்லுநர்
கருதுகின்றனர். நிற்க.
இனித் தமிழ் வாக்கிய அமைப்பில் அறிய வேண்டுவனவற்றுள்
ஒரு சில தெரிந்து கொள்வது நலம்.
1. தமிழ்மொழியில் பயனிலை. எழுவாயுடனும் திணை, பால், எண்,
இடம் இவற்றுடனும் மாறுபடாமல் இசைந்து வர வேண்டும். இதை ஒரு
சிறிதும் தெரிந்து கொள்ளாமல் பலர், நாளிதழ்களிலும் வேறு
வெளியீடுகளிலும் அஃறிணை, ஒருமை, பன்மை வினைமுற்றுகளிலே
தவறு செய்கின்றனர். ‘கட்டுப்பாடுகள் இனிமேல் கிடையாது’ என்றும்,
‘அங்கே நூறு அல்லது இருநூறு வீடுகள் இருக்கிறது’ என்றும்,
‘வியப்பும் கவலையும் ஏற்பட்டிருக்கிறது’ என்றும், ‘இன்று செய்திகள்
வராது’ என்றும் பலர் எழுதக் காண்கிறோம். ‘கட்டுப்பாடு கிடையாது’
என்றாவது. ‘கட்டுப்பாடுகள் கிடையா’ என்றாவது எழுத வேண்டும்;
‘அங்கே நூறு அல்லது இருநூறு வீடுகள் இருக்கின்றன’ என்று எழுத
வேண்டும். ‘வியப்பும் கவலையும் ஏற்பட்டிருக்கின்றன’ என்று எழுத
வேண்டும். ‘இன்று செய்திகள் வாரா’ என்று எழுத வேண்டும்.
இப்பிழைகளை நீக்கக் கீழ்வரும் அடிப்படை இலக்கண விதிகள்
மனத்தில் நன்கு அமையுமாறு திரும்பவும் இங்குக் கூறப்படுகின்றன.
|