பக்கம் எண் :

வாக்கிய அமைப்பில் அறிய வேண்டுவன 309

2. நேரு தன் தாய் நாட்டின் மதிப்பை உலகில் உயர்த்தி
வந்தார்.

இவ்வாக்கியத்தில் ‘தன்’ என்றிருப்பது தவறு; ‘தம்’ என்றிருக்க
வேண்டும். அவர் தன் வீட்டுக்குப் போனார் என்று எழுதாமல் தம்
வீட்டுக்குப் போனார் என்று எழுதுக. மரியாதைப் பன்மையாக இருப்பதால்
தம் என்றே எழுதுவதுதான் சரியானது. மரியாதைப் பன்மை
வினைமுற்றை ஏற்றுவரும் எழுவாய் பலர்பாலில் இருந்தால்,
அதனுடைய பிரதிப்பெயரும்
(Pronoun) பலர்பாலில் இருக்க வேண்டும்.

‘ஒளவையார் நல்வழி இயற்றினார்’ என்னும் வாக்கியத்தில்
‘இயற்றினார்’ என்று வினைமுற்று வருவதால், ஒளவையார் ‘ஆணோ
பெண்ணோ’ என்னும் ஐயம் பலர்க்கு எழுவதுண்டு. ஒளவையார்
பெண். பெண்பாலுக்கு ‘ஆர்’ விகுதி மரியாதைக்காக வரும்,
இதனை இலக்கணத்தில் ‘பால் வழுஅமைதி’ என்பர். மரியாதைக்காக
அல்லது உயர்வுக்காக ‘ஆர்’ விகுதி சேர்க்கும்போது வினைமுற்றும்
பலர்பால் வினை முற்றாகவே இருக்கவேண்டும். ஒளவையார் தம்
நூலில் கூறினார் என்றுதான் எழுதவேண்டும். ஒளவையார் தன் நூலில்
கூறினார் என்று எழுதுவது தவறு. மரியாதைப் பன்மைக்கும்
பிரதிப்பெயர் பலர்பாலிலே இருக்க வேண்டும் என்றறிக. திருமதி
ஜோதியம்மாள் கூறினாள் என்று எழுதுவது இலக்கண முறைப்படி
தவறாக இல்லாதிருப்பினும், மரியாதைக் குறைவாகும். ‘கூறினார்’ என்று
எழுதுவது தமிழ் மரபு.

3. என் நண்பர் கூறினார். பலர் கூறினர்.

இவ்வாக்கியங்களை நுட்பமாகக் கவனித்தால், மரியாதைப்
பன்மை வினைமுற்றில் ‘ஆர்’ விகுதி வருதலும்’ பலர் பால் வினைமுற்றில்
‘அர்’ விகுதி வருதலும் தெரிந்து கொள்ளலாம்.

‘என் தாயார் கூறினர்’ என்று எழுதுதல் நன்றன்று; ‘என் தாயார்
கூறினார்’ என்றே எழுதுவது நன்று.