பக்கம் எண் :

310நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

‘அவர்கள் கூறினார்’ என்று எழுதக் கூடாது;

‘அவர்கள் கூறினார்கள்’ என்று எழுதுவதே சிறப்பாகும்.

‘அடிகள் பேசினார்கள்’ என்று எழுதுவதே நல்லது.

4. யார் என்னும் உயர்திணையிலுள்ள மூன்று பால்களுக்கும்
வரும்.

எது, யாது என்னும் வினாக்கள் அஃறிணை ஒருமைக்கும்;
எவை யாவை, யா என்னும் வினாக்கள் அஃறிணைப் பன்மைக்கும் வரும்.

அவன் யார்? அவள் யார்? அவர் யார்?

எது, யாது - இவை அஃறிணை ஒருமை வினாக்கள். எவை
யாவை, யா - இவை அஃறிணைப் பன்மை வினாக்கள்?

இங்கு வந்தது எது? கூறியது யாது? இங்கு வந்தவை எவை?
கூறியவை யாவை?

‘யா காவாராயினும் நாகாக்க’. (யா-எவற்றை)

5. ‘அல்லது’ வரும்போது ஒருமை எழுவாய் இருந்தால் ஒருவன்
வினை முற்றும், பன்மை எழுவாய் இருந்தால் பன்மை வினைமுற்றும்
வரும்.

நாய் அல்லது பூனை கூரை மேல் ஓடுகிறதா?

நாய்கள் அல்லது பூனைகள் கூரைமேல் ஓடுகின்றனவா?

6. ‘ஒவ்வொரு’ என்னும் தொடர் ஒருமை வினைமுற்றைக்
கொள்ளும்.

ஒவ்வொரு நிகழச்சியும் அரசினர்க்குத் தெரிவிக்கப்படுகிறது.

ஒவ்வொன்றும் நாள்தோறும் உடைகிறது.

ஒவ்வொன்றும் தன் தன் இடத்தை அடைந்தது.