பக்கம் எண் :

வாக்கிய அமைப்பில் அறிய வேண்டுவன 311

7. ‘ஒவ்வொருவர்’ என்னும் தொடர், பன்மை வினைமுற்றைக்
கொள்ளும்.

ஒவ்வொருவரும் திருக்குறள் படிக்கின்றனர்.

ஒவ்வொருவரும் தம் தம் வீடு சேர்ந்தனர்.

செல்வன், முருகன், கண்ணன் - ஒவ்வொருவரும் நன்கு
விளையாடுகின்றனர்.

8. ஐயத்தைக் காட்டும் ஓகாரம் வரும்போது பிரிக்கும் பொருளில்
வரும் ‘ஆவது’ என்னும் சொல்லின் பின்னும் ‘அல்லது’ என்று சொல்
வருதல் கூடாது. வினைமுற்று ஒருமையாகவே இருக்கும்.

‘துறவிக்கு விருப்போ அல்லது வெறுப்போ கிடையாது’ என்பது
தவறு.

‘துறவிக்கு விருப்போ வெறுப்போ கிடையாது’ என்றே இருக்க
வேண்டும்.

‘நாயாவது அல்லது நரியாவது இதைத் தின்றிருக்கும்’
என்பது பிழை.

‘நாயாவது நரியாவது இதைத் தின்றிருக்கும்’ என்று எழுதவேண்டும்.

ஆவது என்பது பெரும்பாலும் எதிர்காலத்தைக் குறிக்கவே வரும்.

இந்த மாதக் கடைசியிலாவது அடுத்த மாத முதல் வாரத்திலாவது வா.

அவனாவது இவனாவது இவ்வேலையைச் செய்தல் வேண்டும்.

9. ‘எப்படி’, ‘எவ்வாறு’, ‘எங்ஙனம்’, ‘எவ்வளவு’, ‘எது’ என்று
வாக்கியம் தொடங்குமானால் சமநிலை வருவதற்கு ‘அப்படி’,
‘அவ்வாறு’, ‘அங்ஙனம்’, ‘அவ்வளவு’, ‘அது’ என்றே வரவேண்டும்.