|
இது குறித்துத் தொல்காப்பியத்தில் காணப்படும்
விதிகள் இவை:
"முன்னுயிர் வருமிடத்து ஆய்தப்புள்ளி
மன்னல் வேண்டும் அல்வழி யான"
- தொல்காப்பியம் - எழுத்து - 424
"ஏனைமுன் வரினே தான்நிலை யின்றே"
- தொல்காப்பியம் - எழுத்து - 425
ஆனால், இக்காலத்தில் இவ்விதியை எளிமைக்காகப் பலர்
மேற் கொள்வதில்லை.
12. ரூபாய், பைசா, பவுன், ராத்தல், டன் முதலியவை
பன்மையில் வந்தாலும் ஒருமை வினையே கொள்வது மரபு.
என்னிடம் ஆயிரம் ரூபாய் இருக்கிறது.
அவரிடம் நூறு டன் புளி உளது.
போருக்கு எட்டரைக் கோடி பவுன் பிடித்தது.
13. உடம்பு எல்லாம் நொந்தன.
பொருள் எல்லாம் அழிந்தன.
இவ்வாக்கியங்கள் தவறானவை.
உடம்பு எல்லா நொந்தது என்றும்,
பொருள் எல்லாம் அழிந்தது என்றும் எழுதுக.
இங்கே எல்லாம் என்னுஞ் சொல்லானது முழுதும் என்னும்
பொருளில் வந்துள்ளது. சேனாவரையர் ‘மேனி எல்லாம் பசலை
யாயிற்று என ஒரு பொருளின் பல்லிடம் குறித்து நிற்றலுடைத்து
எல்லாம் என்பது கோடற்கு’ என்று கூறியிருப்பதால்,
இப்பொருளும் உண்டென்பது புலனாகும்.
|