பக்கம் எண் :

316நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

17. இந்தியாவின் வடமேற்கில் காஷ்மீர் என்ற நாடு
இருக்கிறது. இவ்வாக்கியத்தில் ‘என்னும் நாடு’ என்று இருப்பதே
நன்று. ‘என்ற நாடு இருக்கிறது’ என்பது நன்றன்று. ஏன்? காரணம்
கண்டு பிடிக்கவும்.

18. பொதுவாக ஒவ்வொரு வாக்கியத்திலும் அவாய்நிலை,
தகுதி, அண்மைநிலை ஆகிய மூன்றும் அமைந்திருத்தல் வேண்டும்.

ஒரு சொல் பொருள் குறித்து மற்றொரு சொல்லை விரும்பி
நிற்றல் அவாய்நிலை எனப்படும். வீட்டைக் கட்டினான் என்பதில்
வீட்டை என்னும் சொல் கட்டினான் என்னும் சொல்லைப் பொருள்
குறித்து அவாவி நிற்பது காண்க.

ஒரு சொல் மற்றொரு சொல்லோடு தழுவத் தகுதியுடையதாக
இருப்பதே தகுதி என்பது. நீரால் நனை என்னும் தொடரில் நீரால்
என்னும் சொல்லுக்கு நனை என்னும் சொல் தொழிலால்
பொருத்தமாகத் தகுதியாக அமைந்திருப்பது காண்க. தீயால் நனை
என்னும் தொடரில் தீயால் என்பது, நனை என்பதற்குப்
பொருத்தமாக இருக்கிறதா? இல்லையன்றோ?

சில வாக்கியங்களில் ஒரு சொல்லே அவாய் நிலையுடைய
தாகவும், தகுதியுடையதாகவும் இருப்பதுண்டு. வீட்டைக் கட்டினான்
என்பதில் கட்டினான் என்னும் சொல் அவாய் நிலையுடையதாகவும்,
தகுதியுடையதாகவும் இருப்பது காண்க.

சொல்லும்போது வாக்கியத்திலுள்ள சொற்களைக் கேட்போர்க்குப்
பொருள் உணருமாறு சேர்த்துக் கூறுதலை அண்மைநிலை என்பர்.
இது வாக்கியத்தைச் சொல்லும் போது கவனிப்பதற்குரியதாகும்.