பக்கம் எண் :

320நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

8. அஃது அப்பெற்றியோர் அனைவருக்குக் கொடுமை
விளைக்கின்றது.

அனைவருக்கு என்றிருப்பதை அனைவருக்கும் என்று
திருத்துக. முற்றும்மை வரவேண்டும்.

9. அதனால் உண்டாகும் நன்மைகளைச் சொல்லி முடியாது.

சொல்லி முடியாது என்றால் எழுவாய் இல்லாமற் போகிறது.
ஆதலால், ‘சொல்லி’ என்பதைச் ‘சொல்வது’ முடியாது என்று திருத்துக.

10. நன்மையும் தீமையும் நாடி அதனுள் மிகை நாடி மிக்கது
கொள்க.

‘அதனுள்’ என்பதை ‘அவற்றுள்’ என்று திருத்துக. ஏன்?
நன்மையும் தீமையும் என்பவற்றிற்கு ஏற்ப ‘அவற்றுள்’ என்று பன்மை
வரவேண்டும்.

11. பல நண்பர்கள் அந்த ஊரில் இருக்கிறார்கள். சில நண்பர்கள்
இந்த ஊரில் இருக்கிறார்கள்.

‘நண்பர்கள் பலர்’ என்றும், ‘நண்பர்கள் சிலர்’ என்றும் திருத்துக.
பல, சில என்பவை அஃறிணைப் பன்மைகள் என்றறிக.

12. அவர்கள் வசிக்கும் வீடுகளானது மிகவும் நன்றாயிருக்கும்.

‘வீடுகள் ஆனது’ என்பதை ‘வீடுகளானவை’ என்று திருத்தல்
வேண்டும். ஆனது என்பது ஒருமை. வீடுகள் என்னும் பன்மை பெயருக்கு
ஏற்ப ஆனவை என்பது வருதலே தகுதியானது.