|
13. பிரதி ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் விடுமுறை உண்டு.
‘ஞாயிற்றுக்கிழமை தோறும் விடுமுறை’ உண்டு என்று திருத்துக.
பிரதி என்பது வீணானது. ‘பிரதி’ என்னும் சொல் வந்தால்
‘தோறும்’ என்பது தேவையில்லை. ‘தோறும்’ என்பது வந்தால், ‘பிரதி’
என்னும் சொல் வேண்டுவதில்லை,
ஞாயிற்றுக்கிழமைதோறும் என்றிருப்பது போதுமானது;
ஏனென்றால் ஞாயிற்றுக்கிழமை தோறும் என்பதற்கு ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமையும் என்பது பொருளாகும். ஞாயிற்றுக்கிழமைகள்
தோறும் என்பது தவறு.
கம்பர் பால காண்டத்து நகரப்படலத்தின் 53-ஆம் செய்யுளில்
"மெலிந்த நாள்தொறும் இளைப்பன" என்றே பாடியுள்ளார். அவரே,
ஆரணிய காண்டத்து விராதன் வதைப் படலத்தின் 48-வது செய்யுளில்
"பூதங்கள் தோறும் உறைந்தான்" என்று பாடியிருக்கிறார்.
‘தொறும்’, ‘தோறும்’ - இவ்விரண்டும் ஒரு பொருளனவே.
கவிஞர்கள் செய்யுளில் அசை முதலிய தேவை கருதி இவ்விதிக்கு
மாறி எழுதுவதுமுண்டு. அஃது உரைநடைக்குப் பொருந்தாது.
14. நாம் பெரும்புலவர்களைப் பற்றியும், அவர்கள் இயற்றிய
நூல்களையும் பற்றிப் படித்திருக்கிறோம்.
நாம் பெரும்புலவர்களைப் பற்றியும், அவர்கள் இயற்றிய
நூல்களைப் பற்றியும் படித்திருக்கிறோம் என்று எழுதவேண்டும்.
எண்ணும்மை வரவேண்டும்.
15. அது கிழக்கே மைதானமும் தெற்கே வயல்களும் மேற்கே
குளமும் வடக்கே புஞ்சை நிலத்தாலும் சூழப்பட்டிருக்கின்றது.
ந22
|