பக்கம் எண் :

324நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

மூன்றாவது வாக்கியத்திலுள்ள நூற்களில் என்பதை நூல்களில்
என்றும், கடற்களை என்பதைக் கடல்களை என்றும் திருத்துக.

நான்காவது வாக்கியத்திலிருக்கும் நட்புக்களை என்பதை நட்பை
என்று திருத்துக.

தண்ணீர், நட்பு ஆகிய இவற்றிற்குப் பன்மை கிடையாது.
மக்கள் என்பதே பன்மை. மக்கள்கள் என்பது தவறு. கடற்கள்,
நூற்கள், குறிக்கோட்கள் என்று எழுதுவதில்லை. அவ்வாறு
எழுதுவது இன்னோசை பயக்காது. கால்களை காற்கள் என்றும்
தோள்களை தோட்கள் என்றும் கூறுகிறோமா? இல்லையா!

22. ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவில் ஒவ்வொரு
பகுதியிலும் ஒரு படை இருந்தது.

ஒவ்வொரு மணி நேரமும் பொன்னுக்குச் சமமானவை.

முதல் வாக்கியத்தில் ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு படை
இருந்தது என்று திருத்துக. ஒவ்வொரு என்பதற்கு ஒவ்வொரு என்று
வரவேண்டும். ஒரு படை இருந்தது என்பது தவறு ஏன்? ஒரு
படையே எப்படி ஒவ்வொரு பகுதியிலும் இருப்பது முடியும்?

இரண்டாவது வாக்கியத்தில் சமமானது என்று திருத்துக.
ஒவ்வொரு என்பதற்கு ஒருமை வினைமுற்றே வரவேண்டும் என்றறிக.

23. அவள் மனத்தில் யோசனைமேல் யோசனை வந்து
கொண்டிருந்தன.

யோசனைமேல் யோசனை வந்து கொண்டிருந்தது என்று
திருத்துக. இரண்டாவது யோசனையே எழுவாய். ஆதலால், வந்து
கொண்டிருந்தது என்னும் ஒருமை எழுவாயே பொருத்தமானது.