|
24. தேசப்படத்தில் எகிப்து என்று ஒரு நாட்டைக் காணலாம்.
நைல் நதி பாலைவனத்தின் ஒரு பாகத்தை ஒரு செழிப்பான
சோலையாக்கி அவை மனிதனுக்கு ஒரு நன்கொடையாக
அளித்திருக்கிறது.
முதல் வாக்கியத்தில் எகிப்து என்னும் நாட்டைக் காணலாம்
என்று திருத்துக. ஒரு என்பது தேவையில்லை.
இரண்டாவது வாக்கியத்தில் ஒரு செழிப்பான சோலையாக்கி
என்றும், ஒரு நன்கொடையாக என்றும் எழுதவேண்டுவதில்லை.
நைல் நதி பாலைவனத்தின் ஒரு பாகத்தைச் செழிப்பான சோலையாக்கி
அதை மனிதனுக்கு நன்கொடையாக அளித்திருக்கிறது என்று எழுதுவது
போதுமானது.
25. ஒரு மனிதன் ஒரு குளத்திற்குச் சென்று ஒரு குடம் தண்ணீர்
கொண்டு வந்தான்.
இஃது ஆங்கில மரபு (Anglicism); தமிழ் மரபன்று.
ஒருவன் குளத்திற்குச் சென்று ஒரு குடம் தண்ணீர் கொண்டு
வந்தான் என்பது தமிழ் மரபு.
26. சிறுவராய் இருக்கும்போதே கஜினி முகமது இந்தியாவின்
மேல் படையெடுப்பதாய்ச் சபதம் செய்து கொண்டார்.
இருந்தபோதே என்று திருத்துக.
இவர் பள்ளிக்கூடத்தில் வாசித்துக் கொண்டிருக்கும்போது.
இவருக்குப் பள்ளித்தோழர்களாய் இருவர் இருந்தனர்.
வாசித்துக் கொண்டிருந்தபோது என்று திருத்துக. காரணம்
வெளிப்படை.
|