பக்கம் எண் :

326நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

27. நகரத்தில் உள்ளது எல்லாம் உடல் நலத்திற்குக்
கெடுதியானதே.

உள்ளவை எல்லாம்... கெடுதியானவையே எனத் திருத்துக.

28. மக்கள் நவீன வாழ்க்கை வாழத் தொடங்கிவிட்டனர்.

தொடங்கி விட்டார்கள் என்றெழுதுவது பொருத்தமாய் இருக்கும்.

29. அங்கிருந்து நம் வாழ்நாளைக் கழித்தால், நல்ல தூய்மையான
காற்று, கலக்கமில்லாததும் புழு, பூச்சி இல்லாததுமான குளிர்ந்த நீரும்,
ஒத்துவாழ நட்புப் பான்மையும் கடவுட்பற்றும் நல்ல உணர்ச்சியும்
பிறப்பதற்குச் சாதனமாயிருக்கின்றன.

இது தவறான வாக்கியம். இவ்வாக்கியம் கீழ்வருமாறு இருத்தல்
வேண்டும்.

அங்கிருந்து நம் வாழ்நாளைக் கழித்தால், நல்ல தூய்மையான
காற்று, கலங்கலாக இல்லாததும் புழுபூச்சி இல்லாததுமான குளிர்ந்த நீர்
ஆகிய இவை கிடைக்கும். ஒத்துவாழ நட்புப் பான்மை, கடவுட் பற்று,
நல்ல உணர்ச்சி ஆகிய இவை உண்டாக வாய்ப்பும் இருக்கும்.

30. முன்னால் காலத்தை விட்டுவிட்டுப் பின்னால் பணம்
கொடுத்து முயற்சித்தாலும் வாரா.

இவ்வாக்கியம் தவறானது. முன்னால் காலத்தை விட்டு விட்டுப்
பின்னால் பணம் கொடுத்து முயன்றாலும் அது வாராது என்று திருத்துக.

முயற்சித்தால் என்னும் சொல் தவறானது முயற்சி செய்தாலும்
என்றாவது முயன்றாலும் என்றாவது எழுதுதல் வேண்டும். முயற்சி
என்பது தொழிற் பெயர். தொழிற் பெயரில் இருந்து முயற்சித்தான்
என்று வினைமுற்று உண்டாகாது என்றறிக. மற்றப் பிழை வெளிப்படை.