பக்கம் எண் :

328நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

இவ்வாக்கியத்தில் எழுவாய் இல்லை. எனவே,
கோடைக்காலத்தில் மதுரையில் தண்ணீர் கிடைப்பது தொல்லையாக
இருக்கிறது என்று திருத்துக.

38. முக்காற் பங்குக்கு மேற்பட்ட ஜனத்தொகை கிராமங்களில்
இருக்கின்றன.

ஜனத்தொகை கிராமங்களில் இருக்கிறது எனத் திருத்துக.
தொகை என்பது ஒருமை எழுவாய்.

39. இந்தியாவில் பெரும்பாலோருக்கு எழுதப்படிக்கத்
தெரியாது.

வாக்கியம் பிழையானது. இந்தியாவில் பெரும்பாலோருக்கு
எழுதவும் படிக்கவும் தெரிவது இல்லை என்றாவது, இந்தியாவில்
பெரும்பாலோர் எழுதவும் படிக்கவும் அறியார் என்றாவது திருத்துக.

40. ஒருவன் தனித்தும் கூடியும் வாழவேண்டியிருக்கிறது.

இவ்வாக்கியம் தவறானது. ஒருவன் தனித்தும் கூடியும்
வாழவேண்டியவனாய் இருக்கிறான் என்று திருத்துக.

41. அளவுக்கு மிஞ்சிய படிப்பும் அளவுக்கு மிஞ்சிய
விளையாட்டும் உடலுக்கு மிகவும் கெடுதல்,

கெடுதலை உண்டாக்கும் என்றாவது கெடுதலைச் செய்யும்
என்றாவது திருத்துக.

42. நல்ல சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு இராது.

ஏற்றத்தாழ்வுகள் இரா என்றாவது, ஏற்றத்தாழ்வு இருத்தல்
இல்லை என்றாவது திருத்துக.

ஏற்றத்தாழ்வு - உம்மைத் தொகை. இது போன்ற உம்மைத்
தொகையில் மட்டும் வல்லெழுத்து மிகுவது பண்டை இலக்கியங்களில்
காணப்படுகிறது.