|
43. அவன் பட்டினி கிடந்து இறக்க நேரிட்டது.
இதில் எழுவாய் இல்லை. இறப்பது நேரிட்டது என்று திருத்துக
அல்லது அவனுக்குப் பட்டினி கிடந்து இறக்கும் நிலை நேரிட்டது
என்று மாற்றி எழுதுக.
44. செலவுகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல.
கொஞ்சநஞ்சம் என்னும் தொடர் தவறானது; ஆளு கீளு
என்னும் முறையில் அமைந்திருக்கிறது. நஞ்சம் என்னும் சொல்லுக்கு
நஞ்சு என்பது பொருள். ஆதலால், கொஞ்சம் என்பதற்கும் நஞ்சம்
என்பதற்கும் பொருள் தொடர்பே இல்லை. எனவே, செலவுகள்
அளவு கடந்தவை என்க. இதைக் காட்டிலும் செலவு அளவு கடந்தது
என்று திருத்துவதே சரியானது.
45. ஒருவனுக்கு இரண்டு அல்லது மூன்று ஏக்கர் நிலமும், நான்கு
அல்லது ஐந்து வாழை மரங்களும், இரண்டு அல்லது மூன்று தென்னை
மரங்களும், இரண்டு பசு மாடுகளும், ஒரு வீடும் இருந்தால் போதுமானது.
இவ்வாக்கியத்தில் எழுவாய் இல்லை. இருந்தால் அவை
போதுமானவை எனத் திருத்துக.
46. எப்படித் தாய் இருப்பாளோ அவ்வாறு மகள் இருப்பாள்.
எப்படித் தாய் இருப்பாளோ அப்படி மகள் இருப்பாள் எனத்
திருத்துக. இப்படித்தான் திருவள்ளுவர் திருக்குறளில் வாக்கியத்தை
அமைத்துள்ளார் என்றறிக.
47. ஓர் ஆங்கிலப் பழமொழி கூறுவது என்னவென்றால்
காலம் பணத்திற்குச் சமம்.
இது தவறான வாக்கியம்.
காலம் பணத்திற்குச் சமம் என்று ஆங்கிலப் பழமொழி
கூறுகிறது என்று திருத்துக.
|