|
48. இளைஞர்கள் சீர்திருத்தத் திருமணம் செய்து கொள்வது
பற்றி யாவரும் கவனிக்கத் தக்கதே.
யாவரும் கவனிப்பது தக்கதே எனத் திருத்துக.
49. அதன் இயல்பை விளக்கச் சில உதாரணங்களால் எடுத்துக்
காட்டுவோம்.
சில உதாரணங்களை எடுத்துக்காட்டுவோம் என்று திருத்துக.
50. அவ்வூர் நாகரிக மக்களும் உளங்கவரும் இயற்கைக்
காட்சிகளையும் பார்க்கலாம்.
நாகரிக மக்களையும் உளங்கவரும் இயற்கைக் காட்சிகளையும்
பார்க்கலாம் எனத் திருத்துக. எண்ணும்மை ஏற்று வருகின்ற பெயர்ச்
சொற்கள் எல்லாம் ஒரே விதமான வேற்றுமையைப் பெற்று வருதல்
வேண்டும்.
51. அந்தக் கிராமமானது ஏறக்குறைய ஐம்பது அறுபது
வீடுகள் உள்ளதாயும் இரண்டொரு தெருக்கள் அமைந்ததாய்
இருக்கும்.
இரண்டொரு தெருக்கள் அமைந்ததாயும் இருக்கும் என்று
திருத்துக. எண்ணும்மை இரண்டிலும் வரவேண்டும்.
52. தெருவிலிருக்கும் கிணற்றில் கிடந்த பிணத்தை இவ்வூர்க்
காவலர் எடுத்து வந்து ஆராய்ந்து பார்த்ததில், அது மாணிக்கம்
பிள்ளையின் உயிரற்ற உடல் என்றும், அவரை யாரோ அடித்துக்
கிணற்றில் போட்டு விட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.
இது மிகத் தவறான வாக்கியம்.
‘தெருவில்.... ஆராய்ந்து பார்த்ததில், அது மாணிக்கம்
பிள்ளையின் உயிரற்ற உடல் என்பதும், அவரை யாரோ அடித்துக்
கிணற்றில் போட்டிருக்க வேண்டும் என்பதும் தெரிய வருகின்றன’
|