பக்கம் எண் :

தேடி வைத்த செல்வம் 331


என்று வரவேண்டும். இரண்டு எழுவாய்கள் உள்ளதால் வினைமுற்று
பன்மையாக இருத்தல் வேண்டும்.

53. மேரிகோல்டு என்னும் சிறிய பெண் தன் தகப்பன் முன்
வரவில்லை.

சிறிய பெண் என்பதைவிடச் சிறுமி என்று எழுதுவது
பொருத்தமாகும்.

ஒரு மனிதன் அங்கே போகிறான்.

ஓருவன் அங்கே போகிறான் என்று திருத்துக.

ஒரு மனிதன் என்று எழுதுவது தமிழ் மரபன்று.

54. நன்செய் நிலமாக இருந்தால் இரண்டு ஏக்கர் நிலமும்,
புன்செய் நிலமாக இருந்தால் ஐந்து ஏக்கர் நிலமும் கொடுப்பதாக
இருக்கிறது.

கொடுப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று திருத்துக.

55. தொழிற்கட்சித் தலைவர் இங்கிலாந்தின் மந்திரியாக
ஆகியிருப்பது தெரிந்ததே.

‘மந்திரியாக ஆகியிருப்பது’ என்று எழுதுவது தவறு
‘மந்திரியாகியிருப்பது’ என்பதே போதுமானது ‘ஆக’ என்பது
வேண்டுவதில்லை.

56. ஜேம்ஸ் டேவிட் பாராட்டிதழையும் திரு. ச. பழனியப்பன்
பாமாலையும் படித்தளித்தனர்.

செய்தித்தாளில் வந்த இவ்வாக்கியத்தில் இரண்டு பிழைகள்
உள்ளன. ஒன்று. பின்னவர்க்குத் திரு. என்பதைப் போட்டுவிட்டு
முன்னவர்க்குத் திரு. என்னும் மரியாதைச் சொல் இல்லாமை; இரண்டு
பாராட்டிதழையும் என்பதற்கு ஏற்பப் பாமாலையையும் என இரண்டன்
உருபு சேர்ந்தெழுதாதிருப்பது.