பக்கம் எண் :

மாற்றும் வழிகள் 337


27.
மாற்றும் வழிகள்

உலகில் ஒன்று மற்றொன்றாக மாறுவதுண்டு. ஒன்றை
மற்றொன்றாக மாறுவதுமுண்டு. மாறுவதும் மாற்றுவதும் எங்கும்
காணப்படுவன. எழுத்துலகத்தினும் இச்செயல் இல்லாமல் இல்லை.
உடன்பாட்டு வினையை எதிர்மறை வினையாகவும், தன் வினையைப்
பிறவினையாகவும், செய்வினையைச் செயப்பாட்டு வினையாகவும்,
நேர்க்கூற்றை அயற்கூற்றாகவும், வாக்கியங்களில் பொருள் கருதி
மாற்ற வேண்டுவது ஏற்படும். ஒரே கருத்தை வெவ்வேறு
வாக்கியங்களாக மாற்றியும் எழுத நேரிடும். ஆதலால்,
இம்மாற்றங்களைப் பற்றிய வழிமுறைகளை அறிந்து கொள்வது நன்று.

I. உடன்பாட்டு வினையை எதிர்மறை வினையாக மாற்றுதல்

வினைச் சொல்லில் உடன்பாட்டு வினை என்றும், எதிர்மறை
வினை என்றும் பொதுவாக இரு வகை உண்டு. உடன்படும் அஃதாவது
ஒப்புக் கொள்ளும் வினையே உடன்பாட்டு வினை என்பது.
எதிர்மறுக்கும் வினையே எதிர்மறை வினையாகும்.

உடன்பாட்டுவினை, தொழிலின் நிகழ்ச்சியை உணர்த்தும்.
எதிர்மறை வினையோ தொழில் நிகழாமையையும் எதிர்மறுத்தலையும்
அறிவிக்கும்.

சிறப்பாக வகுத்துப் பார்த்தால், உடன்பாட்டு வினைமுற்று,
எதிர்மறை வினைமுற்று என்றும், உடன்பாட்டு பெயரெச்சம்,
எதிர்மறை பெயரெச்சம் என்றும், உடன்பாட்டு வினையெச்சம்,
எதிர்மறை வினையெச்சம் என்றும் பாகுபாடுகள் உள.