பக்கம் எண் :

பத்தியமைப்பு 349


28.
பத்தியமைப்பு

அறிவு வளர்ச்சிக்காக எழுத்தாளர்கள் நாளிதழ்களிலும் வார
மாத வெளியீடுகளிலும் கட்டுரைகள் எழுதி வருகிறார்கள்.
எழுத்தாளர்கள் வெறுஞ் சிந்தனையாளர்களாக இருந்து, கருத்துகளை
மக்களுக்கு வழங்குவது மட்டும் போதாது. அவர்கள் பிழையின்றி
எழுதவும் நன்முறையில் கட்டுரைகள் வரையவும் அறிந்திருத்தல்
வேண்டும்.

பத்தி பத்தியாகப் பகுத்துக் கட்டுரை எழுதினால்தான்
படிப்போர். அக்கட்டுரையை எளிதாகப் படித்துக் கருத்துகளை
விரைவில் புரிந்துகொள்ள முடியும். எழுத்தாளர்களும் கருத்துகளை
ஒவ்வொன்றாக அணிவகுத்துச் சொல்ல முடியும். படிப்பவர்களும் இன்ன
இன்ன புதுக் கருத்துகளை ஆசிரியர் கூறிக்கொண்டு செல்கிறார் என்று
தெரிந்து கொள்ளக்கூடும்.

கருத்துத் தெளிவாக இருந்தால் பத்திகள் எளிதாக அமையும்.
குட்டையைக் குழப்பிக் கொண்டிருந்தால் பத்திகள் கட்டுரைகளில்
நன்றாக அமையா.

பத்தி என்பது ஆங்கிலத்தில் ‘பாரகிராப்’ (Paragraph) எனப்படும்.

பல வாக்கியங்கள் குழுவாக அமைந்து ஒரு கருத்தைத்
தெரிவிப்பதைப் பத்தி என்று கூறுகிறோம். எவ்வாறு ஒரு வாக்கியம்
ஒரே கருத்தைத் தெரிவிக்க வேண்டுமோ அவ்வாறு ஒரு பத்தியும்
ஒரே கருத்தைத் தெரிவிக்கவேண்டும்.