பக்கம் எண் :

350நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

பத்தியில் முதல் வாக்கியம், அதில் வரும் முக்கியமான கருத்தைக்
கூறும். மற்ற வாக்கியங்கள் அக் கருத்தைப் பல வாக்கியங்களில் பல
வழிகளில் விளக்கும், பத்தியில் ஒவ்வொரு வாக்கியமும் இணைந்து
நிற்கும். சிலர் வாக்கியத்தின் முக்கியமான கருத்தைப் பத்தியின்
இறுதியில் கூறுவதுமுண்டு. முக்கியமான வாக்கியத்தை இறுதியில்
அமைப்பதைக் காட்டிலும் முதலில் அமைப்பதே மிகவும்
சிறப்புடையதாகும்.

இப்பத்தியைப் பாருங்கள். இது திரு. வி.க. எழுதியது.

"தமிழர் யார்? தொன்று தொட்டுத் தமிழைத் தாய்
மொழியாய்க் கொண்டவரும், தமிழ் நாட்டில் குடியேறி நிலைத்து
வாழ்வு பெற்றவரும் தமிழராவர் என்று கூறலாம். இவருள் சைவர்
இருக்கலாம்; வைணவர் இருக்கலாம்; அருகர் இருக்கலாம்;
பௌத்தர் இருக்கலாம்; கிறித்தவர் இருக்கலாம்; இஸ்லாமானவர்
இருக்கலாம். இவரனைவரும் தமிழர் என்பதை மட்டும் மறத்தலாகாது".

இப் பத்தி நல்ல முறையில் அமைந்திருப்பது காண்க.

ஒரு பத்தியில் குறைந்தது மூன்று வாக்கியங்களாவது
இருக்கவேண்டும் என்பர் சிலர். வேறு சிலர் 150 சொற்களுக்குக்
குறையாமல் ஒரு பத்தி அமைய வேண்டும் என்று கூறுவர்.
இக்காலத்தில் கற்போர் கவனத்தைக் கவர்வதற்காக ஒவ்வொரு
வாக்கியத்தையும் ஒவ்வொரு பத்தியாக அமைப்பாருமுண்டு.

வாக்கியத்தில் இருக்க வேண்டிய தன்மைகள் அனைத்தும்
பத்தியிலும் அமைய வேண்டும். வாக்கியங்கள் சிறியனவும்
பெரியனவுமாகக் கலந்து இருந்தால்தான் கட்டுரை சுவையாக
இருக்கும். அதுபோவே பத்திகளும் சிறியவனவாகவும் பெரியனவாகவும்