பக்கம் எண் :

பத்தியமைப்பு 351


கலந்து வரவேண்டும். சிறு சிறு பத்திகளாக இருத்தலாகாது;
பெரிய பெரிய பத்திகளாகவே இருத்தலும் கூடாது கூறும் பொருளுக்கு
ஏற்றவாறு பத்திகள் அமைய வேண்டும்.

ஒவ்வொரு பத்தியிலும் தொடக்கமும் முடிவும் இருப்பது
இன்றியமையாதது. முதல் வாக்கியமாகிய தொடக்கம் படிப்போர்
கவனத்தைக் கவரும்படியாக அமைய வேண்டும். பத்தியிலுள்ள
ஒவ்வொரு வாக்கியத்துக்கும் கருத்துத் தொடர்பு இருக்க வேண்டும்.
முன்னே சொன்னவாறு முதல் வாக்கியம் பத்தியிலுள்ள கருத்தை
எடுத்துக்காட்டுவதாகவும், மற்ற வாக்கியங்கள் தொடுத்து அம்முதல்
வாக்கியத்தை விளக்குவனவாகவும் இருந்தாலன்றிக் கருத்தொருமையை
நாம் காணல் இயலாது.

ஒரு பத்திக்கும் மற்றொரு பத்திக்கும் தொடர்பு
இருக்கவேண்டும். இத்தொடர்பு இல்லாவிட்டால் கருத்து தொடர்பு
அமையாது.

சிலர் எழுதுவது படிக்கத்தக்கதாக இருப்பதில்லை. காரணம்
யாது? திறமையில்லாமையினாலன்று. ஒரே சொல்லையே திரும்பத்
திரும்ப அமைத்து எழுதுவதாலும், ‘உள்ளங்கை நெல்லிக்கனி என’,
‘வெள்ளிடை மலையென’ என்பன போன்ற படித்துப் படித்து
வெறுத்துவிட்ட உவமைகளைத் திருப்பித் திருப்பி எழுதுவதாலும்
படிப்பதற்குப் பத்திகள் சுவையுடையவனவாக இருப்பதில்லை.
புதுச்சொற்றொடர்களையும், மரபுத் தொடர்களையும்
(Idioms)
வெவ்வேறு உவமைகளையும் சொற்களையும் பயன்படுத்தி எழுதினால்,
பத்திகள் ஏன் சுவையுடையனவாக இராமல் போகும்? இத்திறமை
அடைவதற்கு எழுத்தாளர்கள் தலைசிறந்த தமிழ் உரைநடை
நூல்களைப் படித்து வரவேண்டும். இலக்கண அறிவும் இலக்கிய
அறிவும் மொழித் தேர்ச்சியும் எழுத்தாளர்களுக்கு இன்றியமையாதவை.