|
2. ஏனென்றால், ஏனெனில் ஆகிய காரணக்கிளவிகளுக்கு
முன் அரைப்புள்ளியிடுக. காரணம் காட்டும் சொற்களைக் காரணக்
கிளவிகள் என்பர்.
1. நான் இன்று பேசமாட்டேன்; ஏனென்றால், என் தொண்டை
நோயுற்றிருக்கிறது.
2. முருகன் தேர்வில் தேறவில்லை; ஏனெனில், அவன் எழுதிய
விடைத்தாளில் அவனது கையெழுத்துக் கிறுக்கலாக இருந்தது.
3. ஒரு வாக்கியத்தில் பல சிறு வாக்கியங்கள் இருந்து முழுக்
கருத்தை விளக்குமாயின், ஒவ்வொரு வாக்கியத்தின் பின்னும்
அரைப்புள்ளியிடுக.
1. மலையும் மலையைச் சார்ந்த இடமும் குறிஞ்சி நிலம் எனப்படும்;
அது குறவர் முதலியவர்களுக்கு உறைவிடம்.
2. காந்தியடிகள் தமக்காக ஒருநாளும் பணம் வாங்கியதில்லை;
நாட்டு முன்னேற்றத்துக்காகவே வாங்கினார்.
3. மனம் அறிந்ததை மறைத்துப் பொய் சொல்லாதே; சொன்னால்
மனமே உன்னை வருத்தும்.
4. ஒன்றுக்கு ஒன்று மாறான கருத்துக் கொண்ட சிறிய சிறிய
வாக்கியங்கள் சேர்ந்து முழுக்கருத்தை விளக்குமானால், ஒவ்வொரு
சிறு வாக்கியத்தின் பின்னரும் அரைப்புள்ளியிடுக.
1. மலர்களோ மோந்தால் வாடும்; விருந்தாளிகளோ சிறிது
முகம் கோணினும் வாடி விடுவார்கள்.
2. கற்றுவல்ல அறிஞர்கள் அடக்கமாயிருப்பார்கள்; கல்லாத
மூடர்கள் ஆரவாரம் செய்வார்கள்.
3. எவன் தன் வலியும் பிறன் வலியும் பார்க்கிறதில்லையோ
அவன் துன்பத்தை அடைவான்; எவன் அவற்றைப் பார்க்கிறானோ
அவன் இன்பம் அடைவான்.
|