பக்கம் எண் :

380நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


(Under Statement) மிகுத்துக் கூறவோ (Over statement) இன்றி,
உள்ளதை உள்ளவாறு கூறுவதைக்
(Exact Statement) கட்டுரையில்
மேற்கொள்ளுதலை ஒரு நாளும் மறத்தல் கூடாது. இங்கே
கூறியவற்றைக் கட்டுரை எழுதுகிறவர்கள் பொதுவாகக் கவனிக்க
வேண்டும்.

கட்டுரையில் பல வகைகள் உண்டு. சில வகைகள் மட்டும்
இங்கே கூறப்படும். அவை இவை.

சிந்தனைக் கட்டுரை: கருத்தில் எழும் பொருளைப் பற்றியது
சிந்தனைக் கட்டுரை. இது பொதுவாக அன்பு போன்ற பண்புப் பொருள்,
கல்வி போன்ற சமூகப் பொருள், நாட்டுப்பற்றுப் போன்ற அரசியல்
பொருள் இவற்றைப் பற்றி எழுதப்படுவது.

கதைக் கட்டுரை : ஒரு நிகழ்ச்சியையோ பல நிகழ்ச்சிகளையோ
கதைப் போக்கில் கூறுவது கதைக் கட்டுரையாகும். புராணக்கதை,
வரலாற்றுக்கதை, வாழ்க்கை வரலாறு. சுற்றுலா நிகழ்ச்சி, உண்மைக்
கதை, கற்பனைக் கதை இவையனைத்தும் கதைக் கட்டுரையின்
பாற்படும்.

வருணனைக் கட்டுரை: ஒரு பொருளைக் குறித்தோ ஓர்
இடத்தைக் குறித்தோ வருணிப்பது வருணனைக் கட்டுரையாகும்.
செடி, கொடி, மரவகை, உலோகப் பொருள், நாடு நகரங்கள்,
இயற்கை, செய்பொருள், குணநலன்கள் இவற்றைப் பற்றி
எழுதுவதையே வருணனைக் கட்டுரை என்கிறோம். சூரியனைப்
பற்றியோ மதுரையைப் பற்றியோ இவ்வகைக் கட்டுரை எழுதலாம்.

விளக்கக் கட்டுரை : ஒரு பொருளை விளக்கி எழுதுவது
விளக்கக் கட்டுரை. நிலையங்கள், தொழில்கள், விஞ்ஞானப் பொருள்கள்,
இலக்கியப் பொருள்கள் இவற்றைக் குறித்து எழுதுவது விளக்கக்
கட்டுரையாகும். இவ்வகையில் மின்சாரத்தைப் பற்றியோ, பத்திரிகைத்
தொழிலைக் குறித்தோ, கம்பர் கவியழகைப் பற்றியோ எழுதலாம்.