31.
மொழி நடை
செய்யுளை என்ன என்று விளக்க இயலாதது போல, மொழி
நடையையும் இன்னது என்று விளக்குவது இயலாது. கட்டுரை
எழுதுவோரோ நூல் இயற்றுவோரோ தம் கருத்தைப் பிறர் உள்ளத்தில்
விரும்பிச் சேருமாறு எழுதும் முறையைத்தான் மொழிநடை என்கிறோம்
என்று மட்டும் சொல்லலாம். சுருங்கக் கூறினால், உரைக்குஞ் செவ்வியே
அல்லது முறையே மொழிநடை என உரைக்கலாம்.
மொழிநடையின் நோக்கம் கற்பார் உள்ளத்தைக் கவர்வதே
யாகும். இந்நோக்கம் இல்லை என்றால் எழுதுவது பயனடையாது.
‘மொழிநடை எப்படிப் பொருந்தியிருக்க வேண்டும்?
எவ்விதமான சொற்களைப் பயன்படுத்த வேண்டும்? மொழி நடை
என்ன இலக்கணம் அமைந்ததாக இருக்கவேண்டும்?’ என்று பல
வினாக்கள் மொழி நடையைக் குறித்து எழுதுகின்றன. மொழி நடையைப்
பற்றிப் பலர் பலவாறு கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
உலகப் பேரறிஞர்களுள் ஒருவரான ராஜாஜி, ‘‘தமிழ் மொழி நடை,
பேச்சு நடையில் அமைந்திருக்கவேண்டும்” என்றார். பேச்சு நடையை
விளக்குகையில் அவர், ‘‘பேச்சு நடை எழுதுங்கால் கொச்சை
மொழியையும் ஆங்கில மொழியையும் அறவே நீக்கி எழுத வேண்டும்
என்றும், பேசத்தக்கவர்கள் எவ்வாறு பேசுவார்களோ அவ்வாறு
எழுதுவதே பேச்சு நடையாகும் என்றும், அத்தகைய பேச்சு நடையே
அழகும் சுவையும் வலிமையும் வாடாப்புதுமையும் கொண்டு விளங்கும்”
என்றும் தமது வசன நடையைப் பற்றிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறியிருக்கும் பேச்சு நடை என்பது இக் காலத்தில் பலரும்
|