பக்கம் எண் :

மொழி நடை 385


படித்து அவற்றைப் போன்று எழுதி எழுதிப் பயின்று நல்ல மொழி
நடை எழுதும் திறமை பெற்றேன்” என்று தம் பட்டறிவை
(அனுபவத்தை) உரைப்பது நமக்கும் வழி காட்டும் என்று சொல்ல
வேண்டுவதில்லை.

பலருடைய மனப்பண்புகளுக்கு ஏற்றவாறு பலவகை மொழி
நடைகள் அமைவது இயற்கை. வடமொழியாளர் நாரிகேள பாகம்,
இட்சு பாகம், கதலி பாகம், திராட்சா பாகம், க்ஷீர பாகம் என ஐவகைச்
செய்யுள் நடைகளைக் குறிப்பிடுகிறார்கள். தேங்காய்ச் சுவை நடை,
கரும்புச் சுவை நடை, வாழைப்பழச் சுவை நடை, திராட்சைப்பழச் சுவை
நடை, பால் போன்றுள்ள இனிய சுவை நடை என அவற்றை முறையே
தமிழில் கூறலாம். கடினமானது நாரிகேள பாகம். சிறிது கடினமானது
இட்சுபாகம். எளிதானது கதலி பாகம். மிகவும் எளிதானது திராட்சா
பாகம். மிகவும் இனிமையான நடை க்ஷீர பாகம். சொற்களைப் பயன்
படுத்துவதிலேதான் பெரும்பாலும் கடினமும் எளிமையும் இனிமையும்
தோன்றும் என்றறிக.

உரை நடையிலும் பலவகை நடைகளைக் கூறலாம். கொடுந்தமிழ்
நடை, செந்தமிழ் நடை, திரிசொல் நடை, இயற்சொல் நடை, இலக்கிய
நடை, கலப்பு மொழி நடை, தனித்தமிழ் நடை, அடுக்குமொழி நடை,
பழந்தமிழ் உரைநடை, செம்மாப்பு மொழி நடை, தெளிவு நடை எனக்
கூறலாம்.

கொச்சை மொழியிலேயே எழுதுவது கொடுந்தமிழ் நடை.

நல்ல தமிழில் பிழையின்றி எழுதுவது செந்தமிழ் நடை.

கடினமான சொற்களால் அமைவது திரிசொல் நடை.

எளிய சொற்களால் எழுதப்படுவது இயற்சொல் நடை.

செய்யுள்களில் சொற்களையும் தொடர்களையும் அடிகளையும்
அமைத்து எதுகை மோனைத் தொடைகளைத்