பக்கம் எண் :

மொழி நடை 387


எளிய தெளிவு நடை எழுதுவர். ‘மொழிநடையே எழுத்தாளன்:
எழுத்தாளனே மொழி நடை (Man is the style and the style is the
man)
என்றார் பிரான்சு நாட்டுப் பேரறிஞர். ஆதலால்
எழுத்தாளர்களுடைய பண்புகளுக்கு ஏற்றவாறு பல வகை மொழி
நடைகள் இருந்தே தீரும். சிலருடைய மொழி நடையைப் பற்றிக்
குறை கூறுவதில் பயனில்லை.

தெளிவு நடை : பயனைக் கருதி நாட்டிலுள்ள மக்கள் இடையே
அறிவைப் பரப்ப வேண்டுமென்றால் இன்றைக்கு எழுத்தாளர்கள்
கைப்பற்ற வேண்டுவது எளிய தெளிவு நடை என்பதை யாரும் மறுக்க
இயலாது. ‘எளிய நடையே அழகிய நடை. எளிமையே மொழி நடைக்கு
இனிய அணி’
(Simplicity is the ornament of style) என்பது ஆங்கிலப்
பழமொழி. சொல்லும் திறமும் கருத்துத் தெளிவும் இருந்தால்தான்
நடையில் தெளிவு உருவாகும். சொல்லலங்காரம் கருத்தின்மையைக்
குறிக்கும். எளிய தெளிவு நடை எழுத வேண்டுமெனில், சொல்லறிவு,
சொற்களைப் பயன்படுத்தும் திறன், கருத்துத் தெளிவு, எளிதாகக் கூறும்
பேராற்றல், சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், நவின்றோர்க்கு
இனிமை, நன்மொழி புணர்த்தல், நேர்மை, எளிமை இவை அனைத்தும்
தேவைப்படும் என்று சுருங்கக் கூறலாம்.

கருத்தைத் தெளிவாக உளத்தில் அமைத்துக் கொண்டு
உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று கூறாத நேர்மையுடன் எழுதப்
பழகினால், அழகிய தெளிவு நடை அமைவது கடினமன்று; எளிதாகக்
கைகூடும். அதற்கு நல்ல மொழி நடை நூல்களைக் கற்ற வண்ணம்
இருத்தல் வேண்டும். வேறு மொழிகளை அறிந்தவர்கள், அம்மொழியிலுள்ள
ஓரிரு நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினால், நாளடைவில்
நல்ல மொழி நடை கைவரப் பெறலாம். நடையும் நடைப் பழக்கந்தானே.
நல்ல எளிய தெளிவுள்ள மொழி நடையே நலம் பயக்கும் என்றறிக.

அடுத்துவரும் அறிஞர் பெருமக்களின் மொழி நடையைக்
கவனித்துப் படியுங்கள்; ஓரளவு பயன் பெறலாம்.